காமன்வெல்த் கூட்டமைப்பில் மீண்டும் மாலத்தீவு: இந்தியா வலியுறுத்தல்

காமன்வெல்த் கூட்டமைப்பில் மாலத்தீவு மீண்டும் விரைந்து சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. 


காமன்வெல்த் கூட்டமைப்பில் மாலத்தீவு மீண்டும் விரைந்து சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. 
காமன்வெல்த் கூட்டமைப்பு தொடங்கப்பட்டதன் 70-ஆவது ஆண்டையொட்டி, அந்த அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் லண்டனில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதனை வலியுறுத்தினார். 
மாலத்தீவு, கடந்த 1982 முதல் காமன்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகித்தது. கடந்த 2016-ஆம் ஆண்டில் காமன்வெல்த் அமைப்புடனான தனது உறவை துண்டித்துக் கொண்டது. பின்னர், கடந்த 2018-ஆம் ஆண்டில் காமன்வெல்த் கூட்டமைப்பில் சேருவதற்கு மாலத்தீவு விண்ணப்பித்தது. 
இதுதொடர்பாக அந்தக் கூட்டத்துக்குப் பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: 
காமன்வெல்த் கூட்டமைப்பில் மாலத்தீவை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூட்டத்தில் வலியுறுத்தினார். 
பின்னர், காமன்வெல்த் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதன் உறுப்பு நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2018-ஆம் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். 
இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சரை பங்கேற்கச் செய்ததன் மூலம், காமன்வெல்த் கூட்டமைப்புக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தை:  காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தையொட்டி, பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெரிமி ஹன்ட், ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் மேரிஸ் பெய்ன், கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷாரியார் ஆலம் ஆகியோருடன் அமைச்சர் ஜெய்சங்கர் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 
இந்தக் கூட்டத்தின்போது, கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அத்துடன், அடுத்த ஆண்டு ருவாண்டா நாட்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com