சொத்துகள் முடக்கத்துக்கு தடை கோரி மல்லையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவிட முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம்
சொத்துகள் முடக்கத்துக்கு தடை கோரி மல்லையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி


தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவிட முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்து விட்டது. சொத்து முடக்க நடவடிக்கைககு எதிராக, அவர் தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத கிஷ்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். அவருக்கு எதிராக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 
மும்பையில் உள்ள கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம், தலைமறைவு நிதி மோசடியாளர் சட்டத்தின்கீழ், மல்லையாவை தலைமறைவு நிதி மோசடியாளராக கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அந்தச் சட்டத்தின்கீழ், அவரது சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் அந்த நீதிமன்றம் தொடங்கியது.
இதையடுத்து, அந்தச் சட்டத்துக்கான அங்கீகாரத்தை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் மல்லையா மனுவொன்றை தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தனது சொத்துகளை முடக்கும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை மல்லையா கடந்த மாதம் தாக்கல் செய்திருந்தார். 
அந்த மனுவில், தலைமறைவு நிதிமோசடியாளர் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, அச்சட்டத்தைப் பின்பற்றி எனது சொத்துகளை முடக்கும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று 
மல்லையா குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு, மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அகில் குரேஷி, எஸ்.ஜே.கதாவாலா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com