நிகழாண்டில் மத்திய, மாநில அரசுகளின் 25 வலைதளங்களில் ஊடுருவல்:  ரவிசங்கர் பிரசாத்

நிகழாண்டில் கடந்த 5 மாதங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 25 வலைதளங்களில் ஊடுருவல் நடைபெற்றிருப்பதாக மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
நிகழாண்டில் மத்திய, மாநில அரசுகளின் 25 வலைதளங்களில் ஊடுருவல்:  ரவிசங்கர் பிரசாத்


நிகழாண்டில் கடந்த 5 மாதங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 25 வலைதளங்களில் ஊடுருவல் நடைபெற்றிருப்பதாக மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ரவிசங்கர் பிரசாத் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்திய கணினி அவசர நிலை மீட்புக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கை, அந்த குழுவுக்குக் கிடைத்த தகவல்கள் ஆகியவை மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகளின் வலைதளங்களில் பல முறை ஊடுருவல் நடந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. அதன்படி 2016-ஆம் ஆண்டில் 199  வலைதளங்களிலும், 2017-ஆம் ஆண்டில் 172, 2018-ஆம் ஆண்டில் 110, 2019-ஆம் ஆண்டில் 25  வலைதளங்களிலும் ஊடுருவல் நடைபெற்றுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியின் காரணமாக, அதுதொடர்பான சேவைகள், சைபர் தாக்குதல்கள் ஆகியவைகளால் உலகளாவிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சைபர்தடம் என்பது எல்லையில்லாதது, அதேபோல், சைபர் தாக்குதல்களும் எங்கிருந்து வேண்டுமானாலும், யார் மூலமாகவும் நடக்கலாம்.
இதை கவனத்தில் கொண்டு சைபர் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கும், சைபர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சைபர் பாதுகாப்புத் தொடர்பாக மக்களுக்கு இந்திய கணினி அவசரநிலை குழு, குறுஞ்செய்தி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதேபோல், சைபர்  தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
சைபர் பாதுகாப்புக்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களையும் அந்தக் குழு வெளியிட்டுள்ளது. அதை  வலைதளங்களில் பொதுமக்கள் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.
ரிசர்வ் வங்கியிடம் இருந்து கிடைத்துள்ள தரவுகள் (டேட்டா) கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பாயிண்ட் ஆப் சேல் பரிவர்த்தனைகள் 115.523 கோடிக்கு நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கின்றன. கடந்த 2014-15ஆம் ஆண்டில் இதே எண்ணிக்கை 142.321 கோடியாகவும், 2015-16-ஆம் ஆண்டில் 255.928 கோடியாகவும், 2016-17-ஆம் ஆண்டில் 348.643 கோடியாகவும், 2017-18ஆம் ஆண்டில் 474.855 கோடியாகவும், 2018-19-ஆம் ஆண்டில் 617.687 கோடியாகவும் இருந்தன என்றார் ரவிசங்கர் பிரசாத்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com