பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்று 14 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் தோல்வி அடைந்திருந்தன. இதன் தொடர் நடவடிக்கையாக, மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கு இடையே அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், கடந்தஜூலை 1-ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13, மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் தங்கள்பதவியை ராஜிநாமா செய்து பேரவைத் தலைவரிடம் கடிதங்களை கொடுத்துள்ளனர். 
இதனிடையே, அமைச்சர் பதவிகளை ராஜிநாமா செய்த 2 சுயேச்சை எம்எல்ஏக்கள், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெற்றுக்கொண்டதோடு, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 16 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள் மீது பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் நடவடிக்கை எடுக்காததால், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது. 
கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதால் முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை முன்வைத்து பெங்களூரு விதானசெளதாவில் புதன்கிழமை பாஜக எம்எல்ஏக்கள் தர்னா போராட்டம் நடத்தினர். 
ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் பாஜக ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய மஜத,காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர். இதனால் கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவினருக்கு இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கூட்டணி அரசு கவிழும் எண்ணத்தில் இருந்த பாஜகவுக்கு பேரவைத் தலைவரின் நடவடிக்கை வருத்தத்தை அளித்துள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டப்படி பெங்களூரில் இன்று கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நண்பகல் 12 மணிக்கு தொடங்கவிருக்கிறது. சட்டப்பேரவைக் கூடியதும் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் தொடர பாஜக ஆட்சேபனை தெரிவித்து, போராட்டத்தில் குதிக்கும் என்று தெரிகிறது. 
2019-20-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஜூன் 30-ஆம் தேதி வரை மட்டுமே ஒப்புதல் பெற்றிருந்த நிதித் துறையை கவனிக்கும் முதல்வர் குமாரசாமி, ஆண்டுமுழுவதற்குமான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் 
பெற வேண்டியது அவசியமாகும். ஒருவேளை இதை பெறாவிட்டால் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அரசின் செலவினங்கள் எதையும் மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டு, அரசியலமைப்புச்சட்டசிக்கல்களுக்கு வழிவகுக்கும். 
அரசியல் குழப்பங்கள், போராட்டங்களுக்கு இடையே 2019-20-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றும் நிதிமசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்ற கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எந்தகாரணத்தை முன்னிட்டும் சட்டப்பேரவையை செயல்படவிடக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக கர்நாடகத்தில் நிகழ்ந்துவரும் அரசியல் குழப்பங்களைக் கவனித்துவரும் பொதுமக்கள், சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். தற்போதைய அரசியல் சூழலில், ஜூலை 26-ஆம் தேதிவரை 11 நாள்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருக்கும் சட்டப்பேரவைக்கூட்டம் நடக்குமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com