மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு: தன்னார்வ அமைப்புகளுக்கு ஹர்ஷ்வர்த்தன் வலியுறுத்தல்

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தன்னார்வ அமைப்புகள் ஆண்டுக்கு ஒரு மாதம்


மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தன்னார்வ அமைப்புகள் ஆண்டுக்கு ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் வலியுறுத்தியுள்ளார்.
25-ஆவது ஆண்டு உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பது உள்பட அவர்களின் சுகாதார பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டுமெனில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.
இதற்காக, அரசின் அனைத்துக் கொள்கைகளிலும் மக்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மேலும், பாலின சமத்துவம், தாய்-சேய் நலம், மனித உரிமைகள், வறுமை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
மேலும், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சமூகம், தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், ஊடகங்கள் ஆகியோரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. தன்னார்வ அமைப்புகள் ஆண்டுக்கு ஒரு மாதம் இதற்காக பணியாற்ற வேண்டும். அப்படிச் செய்தால், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்; சர்வதேச தரத்தில் சுகாதாரத்தைப் பேண முடியும்.
முந்தைய காலக்கட்டங்களில் நமக்கு சவாலாக விளங்கிய போலியோவை முற்றிலுமாக ஒழித்து சாதனை படைத்துள்ளோம். சமூகத்தின் பங்களிப்பு இருந்தால், சவால்களை சாத்தியமாக்கலாம் என்பதை அனுபவத்தின் வாயிலாக அறிந்து வைத்துள்ளோம். அதேபோல், தற்போதைய சவால்களை வெல்வதற்கு இணைந்து பணியாற்றவேண்டும் என்றார் ஹர்ஷ்வர்த்தன்.
நிகழ்ச்சியில் குடும்ப கட்டுப்பாடு தொடர்பான புதிய விழிப்புணர்வு பிரசாரத்தையும் ஹர்ஷ்வர்த்தன் தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com