மத்திய பட்ஜெட்: தெற்கு ரயில்வேக்கு  ரூ.4,118.80 கோடி ஒதுக்கீடு

நாடாளுமன்றத்தில் கடந்த 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) தெற்கு ரயில்வேக்கு பல்வேறு திட்டப் பணிகளுக்கு ரூ.4,118.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
மத்திய பட்ஜெட்: தெற்கு ரயில்வேக்கு  ரூ.4,118.80 கோடி ஒதுக்கீடு


நாடாளுமன்றத்தில் கடந்த 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) தெற்கு ரயில்வேக்கு பல்வேறு திட்டப் பணிகளுக்கு ரூ.4,118.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
நடப்பு பட்ஜெட்டில் ரயில்வே பாதுகாப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சில திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் 2019-20-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.  நாடு முழுவதும் ரயில்வே திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இதில், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய ஆறு கோட்டங்களை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேக்கு 2019-20-ஆம் நிதியாண்டில்  பல்வேறு திட்டங்களுக்கு ரூ.4,118.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.   இரட்டை பாதை திட்டத்துக்கு ரூ.901.90 கோடியும், அகல பாதை திட்டத்துக்கு ரூ.245.10 கோடியும், புதிய பாதை திட்டத்துக்கு ரூ.52.29 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 இந்த பட்ஜெட்டில், ரயில்வே பாதுகாப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சாலையில் பாலப்பணிக்கு ரூ.380.54 கோடியும், லெவல் கிராசிங் பணிக்கு ரூ.51.87 கோடியும், தண்டவாளம் சீரமைப்புப் பணிக்கு ரூ.918 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
பல்வேறு போக்குவரத்து வசதியை மேம்படுத்த ரூ.41.47 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரயில்நிலையங்களில் பயணிகள் வசதியை மேம்படுத்த ரூ.264.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இதுதவிர, சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பணிக்கு ரூ.110.54 கோடியும், பணியாளர்கள் நலத் திட்டத்துக்கு ரூ.60.39 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான திட்டங்கள்: தமிழகப் பகுதிகளில் 9 புதிய ரயில் பாதை திட்டங்கள், 5 அகல பாதை திட்டங்கள், 9 இரட்டை மற்றும் கூடுதல் வழித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  மத்திய நிதிநிலை அறிக்கையில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், தமிழக திட்டங்கள் சிலவற்றுக்கு  நிதி கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிகிறது. 
தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தட்சிண ரயில்வே தொழிலாளர்கள் சங்க துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறியது: 
தெற்கு ரயில்வேயில் 11 புதிய பாதை திட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், 9 புதிய பாதை திட்டங்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றன. 
இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேயில் நடைபெற்று வரும் 11 புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.54 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டது. 
தற்போதைய திருத்தப்பட்ட பட்ஜெட்டில் ரூ.52 கோடியே 28 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் இரண்டு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கணிசமாக குறைந்துள்ளது.
திண்டிவனம்-நகரி இடையேயான 179 கி.மீ. தொலைவில் புதிய பாதை திட்டத்துக்கு இந்த நிதியாண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதி தற்போது ரூ.7 கோடியே 89 லட்சம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
அதேபோல ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையேயான 17 கி.மீ. தொலைவில் புதிய பாதை திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது.  தற்போது ஒரு லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
திட்ட மதிப்பீடு அதிகரிக்க வாய்ப்பு: அகல பாதை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.245 கோடியே 10 லட்சத்தில் எந்த மாற்றமும் இல்லை. தெற்கு ரயில்வேயின் ஒட்டுமொத்த இரட்டை மற்றும் 3- ஆவது, 4-ஆவது வழிப்பாதை திட்டங்களுக்கு ரூ.902 கோடியே 40 லட்சம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
தற்போது, அந்த நிதியில் ரூ.50 லட்சம் குறைந்து, ரூ.901 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
நடப்பு 2019-20 நிதியாண்டில் கடந்த சில மாதங்களில் நடந்து வரும் பணிகளில் வேகம், அடுத்த வரும் 8 மாதங்களின் தேவை அடிப்படையில் பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. 
புதிய பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பதால் திட்ட மதிப்பீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
இரட்டை பாதை திட்டம்: மூன்று இரட்டை பாதை திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 
மதுரை-வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி இடையேயான(160 கி.மீ.) , வாஞ்சிமணியாச்சி-திருநெல்வேலி-நாகர்கோவில் இடையேயான (102 கி.மீ.), கன்னியாகுமரி-நாகர்கோவில்-திருவனந்தபுரம்(86.65 கி.மீ. )  ஆகிய 3 இரட்டைபாதை திட்டத்துக்கு ரூ.490.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இந்த மூன்று திட்டங்களுக்கு ரூ.3,618.70 கோடி தேவைப்படும்  என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று  திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டது. 
இந்த நிதியை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே  பயணிகள் சங்க பொதுச்செயலாளர் எட்வர்ட் ஜெனி கூறியது:
மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி இடையே  160 கி.மீ. தொலைவிலான இரட்டை பாதை திட்டம் அடுத்த ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. 
மற்ற திட்டங்கள் வரும்  2021ஆம் ஆண்டில் முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. 2017-ஆம் ஆண்டில் இருந்து 25 சதவீதம் மட்டும் நிதி ஒதுக்கப்படுகிறது. 
இந்த திட்டங்கள் முடிய 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகலாம். இதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com