
கோவாவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்த 10 எம்எல்ஏக்களில் மூவருக்கு அமைச்சர் பதவி தரப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
சனிக்கிழமை நடைபெறவுள்ள கோவா அமைச்சரவை விரிவாக்கத்தின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த 10 எம்எல்ஏக்களில் மூன்று பேருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று பாஜக சட்டமன்ற உறுப்பினரும், பேரவை துணைத் தலைவருமான மைக்கேல் லோபோவும் அமைச்சராக பதவியேற்றுக்கொள்வார் என தெரிகிறது. அதேசமயம், சுயேச்சை எம்ஏவான ரோஹன் கெளந்த்தே அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.
அமைச்சரவையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட ஏதுவாக, பாஜக கூட்டணி கட்சியான கோவா முன்னணி கட்சியைச் (ஜிஎஃப்பி) சேர்ந்த மூன்று அமைச்சர்களை நீக்க கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நடவடிக்கை மேற்கொள்வார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவில் புதிதாக இணைந்த 10 எம்எல்ஏக்களுடன் தில்லி சென்ற கோவா முதல்வர் சாவந்த், மற்றும் பேரவை துணைத் தலைவர் லோபோ பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர்.
அதையடுத்து, கோவா திரும்பிய லோபோ செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவா அமைச்சரவையில் ஒரே ஒரு சுயேச்சைக்கு மட்டும் இடமளித்துவிட்டு, எஞ்சிய இடங்கள் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு ஒதுக்கப்படும். புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்' என்றார்.
ஜிஎஃப்பி கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய், வினோத் பாலிகர் மற்றும் ஜெய்ஷ் சல்கோன்கர் ஆகிய மூன்று பேரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வருவாய் துறை அமைச்சராக இருக்கும் ரோஹன் கெளந்த்தே நீக்கப்படலாம் என்று தெரிகிறது. மற்றொரு சுயேச்சை எம்எல்ஏவான கோவிந்த் காவ்டே அமைச்சரவையில் தொடர்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவிப் பறிப்பு நடவடிக்கைக்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் மிரட்டல் போக்கே காரணம் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.