
திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அகில் என்ற மாணவர், கல்லூரியில் அரசியல் அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் சங்கத்தை (எஸ்எஃப்ஐ) சேர்ந்த இவர், வெள்ளிக்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தடியில் தனது நண்பர்களுடன் பாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே சங்கத்தைச் சேர்ந்த சிலர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், மாணவர் அகிலை அவர்கள் கத்தியால் குத்தினர். தடுக்க முயன்ற நண்பர்களுக்கும் கத்திக்குத்து விழுந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, எஸ்எஃப்ஐ மாணவர் சங்கத் தலைவர் உள்பட 6 பேருக்கு எதிராகவும், அடையாளம் தெரியாத 20 மாணவர்களுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அகில், திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அதே நேரத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அகில் தவிர, மேலும் 3 பேர் காயமடைந்தனர். அவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, கல்லூரி வளாகம் எதிரே மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
காங்கிரஸ், பாஜக கண்டனம்: இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம், எஸ்எஃப்ஐ அமைப்பின் பயங்கரவாத முகத்தைக் காட்டுகிறது. அந்த அமைப்பினர் வேறு எந்த மாணவர் அமைப்பையும் செயல்பட விடமாட்டார்கள். தற்போது, எஸ்எஃப்ஐ அமைப்புக்குள்ளேயே மோதல் ஏற்பட்டுள்ளது' என்றார் அவர்.
இதேபோல், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், எஸ்எஃப்ஐ மாணவர் அமைப்புக்கும் பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறுகையில், இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து மாணவர்கள் பலமுறை புகார்கள் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்றார்.
இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு கல்வித் துறைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.