ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதில் கவனம் செலுத்துங்கள்: பாஜக பெண் எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல்

ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதிலும், மருத்துவம், சுகாதாரம் ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதில் கவனம் செலுத்துங்கள்: பாஜக பெண் எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல்


ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதிலும், மருத்துவம், சுகாதாரம் ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக அதிக எண்ணிக்கையில் 78 பெண் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில், பாஜகவைச் சேர்ந்தவர்கள் 41 பேர் ஆவர்.
இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி, தில்லியில் உள்ள தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை விருந்தளித்தார். 30-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில், பல்வேறு துறை ரீதியிலான விஷயங்கள் குறித்து அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது, பெண் எம்.பி.க்கள் தங்களது கருத்துகளை அவரிடம் பகிர்ந்து கொண்டனர். அவர்களிடம் மோடி கூறியதாக, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
பெண்களாக இருப்பதால், பொதுமக்களை எளிதில் தொடர்புகொண்டு, அவர்களுடன் கலந்துரையாட முடியும். எம்.பி.க்கள் அனைவரும், சிறார்களிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பது, மருத்துவம், சுகாதாரம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என மோடி அறிவுறுத்தினார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 
பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்களை  ஏழு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவையும் மோடி தனித்தனியே சந்தித்து வருகிறார். இதுவரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடி பிரிவினர், இளம் எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஆகிய பிரிவினரை மோடி சந்தித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கு ஒரு வாய்ப்பாக இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
மேலும், நாடாளுமன்றச் செயல்பாடுகள் குறித்தும், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர்களுடன் விவாதிப்பதற்காகவும், அவர்களுக்கு வழிகாட்டுதல்களை அளிப்பதற்காகவும், இச்சந்திப்புக்கு திட்டமிடப்பட்டதாக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com