பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகள் சாத்தியமானவை: நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களும், இலக்குகளும் நடைமுறைச் சாத்தியமானவைதான் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகள் சாத்தியமானவை: நிர்மலா சீதாராமன்


மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களும், இலக்குகளும் நடைமுறைச் சாத்தியமானவைதான் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி வருவாய் இலக்குகள் எட்ட முடியாதவை. பட்ஜெட்டில் வலுவான அமைப்பு சீர்திருத்தம் எதுவும் அறிவிக்கப்படவில்லை' என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

பின்னர், விவாதத்துக்குப் பதிலளித்து, நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
நாட்டின் பொருளாதாரம் இப்போது ரூ.189 லட்சம் கோடியாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், இதை, ரூ.350 லட்சம் கோடியாக எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு திட்டமிடப்படாமல் நிர்ணயிக்கப்படவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை இரு மடங்காக அதிகரிக்கச் செய்வதற்கு விவசாயம், முதலீடு ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படும்.
மேலும், அந்நிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது, பெரு நிறுவனங்களுக்கான வரியைக் குறைப்பது, மின்சார வாகனங்களுக்கான வரியைக் குறைப்பது,  உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்வது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரி வருவாய் இலக்கை எட்ட முடியாது என்று கூறுவது தவறு. பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்வது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஜிஎஸ்டி வரி வருவாய் 14 சதவீதம் அதிகரிக்கும். இதுதவிர வருமான வரி உள்ளிட்ட பிற வரிகள் மூலம் வருவாய் ஈட்டப்படும்.
இதேபோல், பட்ஜெட்டில் வலுவான சீர்திருத்த திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று கூறுவதும் தவறானது.
கடந்த 2016-இல் கொண்டுவரப்பட்ட திவால் சட்ட நடைமுறைகளும், 2017-இல் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி வரி அமலாக்கமும் சீர்திருத்த நடவடிக்கைகளே.
இதுதவிர, வங்கிகளுக்கு மறுமூலதனம், நேரடி மானியம் அளிப்பது என 16 வகையான சீர்திருத்த நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த பட்ஜெட், அடுத்த 10 ஆண்டுகளை மனதில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இடைக்காலமாக, ரூ.350 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்களும், பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள புள்ளி விவரமும் ஆதாரப்பூர்வமானவை. பொது செலவினங்களுக்கான நிதியை எந்த விதத்திலும் குறைக்காமல், நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு திட்டமும் சாத்தியமானதுதான். அதற்குரிய போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் நிர்மலாசீதாராமன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com