சுடச்சுட

  

  கோவா அமைச்சரவை மாற்றம்: காங்கிரஸில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு  

  By DIN  |   Published on : 14th July 2019 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவா மாநிலத்தில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது. அதில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
   பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் கோவாவில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர், பாஜகவில் குழுவாக அண்மையில் இணைந்தனர். இதனால், 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா பேரவையில் பாஜகவின் பலம் 27-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கட்சியில் புதிதாக இணைந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு பாஜக மேலிடம் முடிவு செய்தது. இதற்காக, அமைச்சர் பதவியில் இருந்து 4 பேரை முதல்வர் விடுவித்துள்ளார்.
   அதன்படி, துணை முதல்வராக இருந்த விஜய் சர்தேசாய், நீர்வளத் துறை அமைச்சர் வினோத் பால்யேகர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயேஷ் சல்கோங்கர் (இவர்கள் மூவரும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கோவா ஃபார்வர்டு கட்சியைச் சேர்ந்தவர்கள்), வருவாய்த் துறை அமைச்சர் ரோஹன் கவுந்தே (சுயேச்சை) ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
   அவர்களுக்குப் பதிலாக, காங்கிரஸில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்தவர்களில், சந்திரகாந்த் கவேல்கர், ஃபிலிப் நெரி ரோட்ரிகஸ், அடானசியோ மான்செரெட்டா ஆகிய மூவரும், பேரவை துணைத் தலைவராக இருந்த மைக்கேல் லோபோவும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
   முன்னதாக, அமைச்சர் பதவியை ஏற்பதற்கு வசதியாக, மைக்கேல் லோபா பேரவை துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.
   இந்நிலையில், பாஜக மேலிடத்தின் உத்தரவுப்படி, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார்.
   கூட்டணி முறிவு: அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து, பாஜக கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக, கோவா ஃபார்வர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
   பாஜகவைச் சேர்ந்த தேசியத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, கோவாவில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் கோவா ஃபார்வர்டு கட்சி இணைந்தது. அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, பாஜகவின் தற்போதைய மாநில நிர்வாகிகள் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை பாஜகவில் சேர்ப்பது, மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானதாகும். எந்தச் சூழலிலும் ஆட்சி தொடருவதற்கு ஆதரவு தருவதாக, பாரிக்கருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காகவே, பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தோம். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி எங்களை ஏமாற்றி விட்டதாக உணர்கிறோம் என்றார் அவர்.
   கோவா ஃபார்வர்டு கட்சியில் சர்தேசாய் உள்பட தற்போது 3 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai