சுடச்சுட

  
  BIBIN

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் ஊடுருவவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் கூறினார்.
   லடாக்கில் டெம்சாக் செக்டார் வழியாக, இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் 11 பேர் இரு வாகனங்களில் கடந்த வாரம் ஊடுருவி வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகின.
   இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற விபின் ராவத்திடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்:
   திபெத் பெளத்த மதத் தலைவர் தலாய்லாமாவின் பிறந்தநாள் விழா, கடந்த 6-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, லடாக்கின் டெம்சாக் பகுதியில் திபெத்தியர்கள் சிலர் திபெத்திய கொடியை ஏற்றி வைத்திருந்தனர்.
   அப்போது, சீன ராணுவத்தினர் சிலர் அங்கு வந்து, என்ன நடக்கிறது என்று பார்த்தனர். பின்னர், அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். இந்திய எல்லைக்குள் அவர்கள் ஊடுருவவில்லை. அங்கு இயல்புநிலை தொடருகிறது.
   எல்லைக் கோடு தொடர்பாக, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே இரு வேறுபட்ட பார்வைகள் உள்ளன. இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையில் ரோந்து பணயில் ஈடுபடுகிறார்கள். இரு தரப்பிலும் ராணுவத்தினரின் அனுமதியின்றி எல்லைக்கு அப்பால் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
   இரு தரப்பிலும் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.
   இதற்கு முன்பு, கடந்த 2017-ஆம் ஆண்டில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள டோக்கா லாம் எல்லையில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.
   அதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதையடுத்து எல்லையில் இரு நாடுகளின் ராணுவமும் குவிக்கப்பட்டதால், 72 நாள்கள் போர்ப்பதற்றம் நீடித்தது.
   பிறகு இரு நாடுகளும் சமாதானமாகி, தங்களது ராணுவத்தை விலக்கிக் கொண்டதையடுத்து அமைதி திரும்பியது குறிப்பிடத்தக்கது.
   முன்னதாக, கார்கில் போருக்குப் பிந்தைய 20 ஆண்டுகள் என்ற தலைப்பில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விபின் ராவத் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
   பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தனது ஆதரவின் மூலமாக பயங்கரவாதம் அல்லது ஊடுருவலை இந்தியாவில் ஊக்குவித்து வருகிறது.
   நமது எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
   பாகிஸ்தான் ராணுவத்தின் எந்தவொரு நாச வேலைக்கும் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும். உரி தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல், பாலாகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை பயங்கரவாதத்துக்கு எதிரான நமது அரசியல் மற்றும் ராணுவ வலிமையை பறைசாற்றுகின்றன. பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவோர் எவரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றார் அவர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai