சுடச்சுட

  

  விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அனைத்து துறைகளின் ஒத்துழைப்பும் தேவை

  By DIN  |   Published on : 14th July 2019 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  anuragthakur

  "வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இதனை எட்ட அனைத்துத் துறைகளின் ஒத்துழைப்பும் தேவை' என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.
   வேலைவாய்ப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் இந்தியப் பொருள்கள் சந்தையை (கமாடிட்டி மார்க்கெட்) விரிவுபடுத்துவது தொடர்பான சர்வதேச மாநாடு தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அனுராக் தாக்குர் கூறியதாவது:
   "கமாடிட்டி மார்க்கெட்' பல்வேறு வகைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. அதே நேரத்தில் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் இதுபோன்ற ஊக வணிகங்கள் மிகவும் பாதுகாப்பாக நடத்துவது மிகவும் அவசியம். இந்த சந்தையில் பொருள்களின் விலையை நிர்ணயிக்கும் அளவுக்கு இந்தியா இப்போது முன்னேற்றமடைந்துள்ளது. சர்வதேச அளவில் முதல்முறையாக வைரத்தை பட்டை தீட்டி விற்பனை செய்வதை "கமாடிட்டி மார்க்கெட்டில்' இந்தியா அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இத்துறையில் இந்தியா எந்த அளவுக்கு வேகமாக முன்னேறி வருகிறது என்பதை அறியலாம்.
   கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் "கமாடிட்டி மார்க்கெட்' இந்திய பங்கு பரிவர்த்தனை மையத்தின் (செபி) கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிக வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. வரும் 2022-ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அதனை எட்ட "கமாடிட்டி மார்க்கெட்' உள்பட அனைத்துத் துறைகளின் ஆதரவும் தேவை. இந்தியா அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
   "கமாடிட்டி மார்க்கெட்' என்பது ஊகத்தின் அடிப்படையில் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், விவசாய உற்பத்திப் பொருள்கள் என 200-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் மையமாகும். இதில் பொருள்களை வாங்க ஒப்பந்தம் செய்வது, விற்பது என அனைத்தும் இணையவழியில் நடைபெறுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai