காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய்வதற்கு காரணம் என்ன?

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய்வதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் நிழலாடுகிறது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய்வதற்கு காரணம் என்ன?

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய்வதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் நிழலாடுகிறது.
 2004, 2006-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, 2018-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் மஜதவும் காங்கிரஸும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கும் நோக்கத்தில், மஜதவும் காங்கிரஸும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்தன.
 பொது எதிரியான பாஜகவுக்கு எதிராக மஜதவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்ததுபோல, அந்த இரு கட்சிகளுக்கு இடையே காணப்பட்டுவந்த முரண்பாடுகளோடும் கூட்டணி அமைத்துக்கொண்டதே தற்போதைய அரசியல் குழப்பத்திற்கு காரணமாக அமைந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
 தென் மாவட்டங்களில் பலம் பொருந்திய கட்சியாக விளங்கும் மஜதவின் அரசியல் எதிரி பாஜக அல்ல, காங்கிரஸ் தான். அதனால், மஜதவை சேர்ந்த குமாரசாமியை முதல்வராக்கி அமைந்த கூட்டணி அரசில் பொழுதுவிடிந்தால் புதுப்புதுப் பிரச்னைகள் ஊற்றெடுத்த வண்ணம் இருந்துவந்தன. இதன் உச்சம் தான் 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளது.
 ராகுல் காந்தியின் விருப்பத்தின்பேரில் அமைந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை காங்கிரஸ் எம்எல்ஏக்களே எதிர்க்கக் காரணமென்ன? தென் கர்நாடக மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களே எதிர்க்க காரணமென்ன? காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான காங்கிரஸ் எம்எல்ஏக்களே ராஜிநாமா செய்ய காரணமென்ன? அமைச்சர் பதவி வகித்த எம்.டி.பி.நாகராஜ், சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆர்.சங்கர், எச்.நாகேஷ் ஆகியோர் பதவியைத் துறக்க காரணமென்ன? ஆட்சியில் இருந்து விலக்கிவைக்க திட்டமிட்டிருந்த பாஜகவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களே ஆதரவு அளிக்க காரணமென்ன? போன்ற கேள்விகள் மக்கள் மனதில் நிழலாடி வருகின்றன.
 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு எதிரிக்கட்சியான பாஜகவுக்கு தாவுவதற்கு கொள்கை மாற்றம் காரணமல்ல. ஆனால் சொந்தக் கதைகள், சோகக் கதைகள் ஏராளமாக உள்ளன. சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது தொகுதிகளுக்கு தேவையானதை பெற்றுவந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சியில் ஒதுக்கப்படுவதாக உணர்ந்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியிலும் குறைகளைக் கேட்டு, தீர்வு காண்பதற்கு தகுதியான ஆட்கள் யாருமில்லாததால், தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள். ஆட்சி அமைக்கத் தேவையானதால், எண்ணிக்கை அளவுக்கு மட்டுமே காங்கிரஸ் எம்எல்ஏக்களை மதித்த முதல்வர் குமாரசாமி, தொகுதி வளர்ச்சி நிதி எதையும் ஒதுக்காதது எரிச்சலுக்கு காரணமாக அமைந்துள்ளது. மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ், மஜத மோசமான முறையில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் தங்கள் கோபத்தை ராஜிநாமா மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
 கூட்டணி அரசுக்கு மக்களிடையே நல்ல பெயர் இல்லாததால், மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் தோல்வி அடைய நேர்ந்தது. கூட்டணி அரசின் பெயர் மக்களிடையே கெட்டுவிட்டதால், இதே கட்சியில் நீடித்தால் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் கருதியுள்ளனர். தொகுதி மக்களிடையே தங்கள் சொந்த செல்வாக்கால் வெற்றிபெற்றிருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், அடுத்த தேர்தலில் வெற்றிபெற கட்சி மாறுவது ஒன்றே தீர்வு என்று கருதி பாஜகவின் பக்கம் சாய்ந்துள்ளனர்.
 தேசிய அளவில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாததாலும், அக் கட்சி மாலுமி இல்லாத கப்பலாகியுள்ளது. கட்சியின் நடவடிக்கைகளுக்கு யாரும் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், தங்கள் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், காங்கிரசைவிட்டு பாஜகவுக்கு தாவியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
 கட்சியின் அனைத்துத் தரப்பினரின் ஆதரவைப் பெற்றுள்ள வலிமைமிக்க தலைவர்கள் யாரும் காங்கிரஸ் அல்லது மஜதவில் இல்லை. கட்சியின் மேலிடத் தலைவர்களின் ஆதரவு இல்லாததால், சித்தராமையாவாலும் திறம்படச் செயல்பட முடியவில்லை. கூட்டணிக் கட்சிகளை பாஜகவுடன் ஒப்பிடுகையில், பாஜக எம்எல்ஏக்கள் அக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பாவுக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்கள். அவரது உத்தரவை மீறாமல் பின்பற்றுகிறார்கள். இது போல, கூட்டணி அரசில் எந்த தலைவரும் இல்லை. எனவே, அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர், பாஜகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com