சந்திரயான்-2 விண்ணில் ஏவுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: இஸ்ரோ தலைவர்

சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் திருப்பதியில் சனிக்கிழமை தெரிவித்தார்.
சந்திரயான்-2 விண்ணில் ஏவுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: இஸ்ரோ தலைவர்

சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் திருப்பதியில் சனிக்கிழமை தெரிவித்தார்.
 சந்திரயான்-2 ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 திட்டமிட்ட நாளில், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட நேரத்தில் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும். மழை, வானிலை மாற்றம் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆந்திரத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து வரும் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 2.51 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்துவிட்டனர்.
 முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்றார் அவர்.
 முன்னதாக, நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008 அக்டோபர் 22-ஆம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. நிலவின் வடதுருவத்தில் தரையிறங்கி 312 நாள்கள் ஆய்வை மேற்கொண்ட இந்த விண்கலம், நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.
 இதன் அடுத்தகட்டமாக தற்போது சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்படுகிறது. இது 14 நாள்கள் நிலவில் ஆய்வை மேற்கொள்ளும். நிலவை சுற்றி வலம் வந்து ஆய்வு செய்யும் 2,379 கிலோ எடைகொண்ட (ஆர்பிட்டர்) விண்கலம், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் 1,471 கிலோ எடைகொண்ட (லேண்டர்) கலம், நிலவின் தரையில் 500 மீட்டர் வரை ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் 27 கிலோ எடைகொண்ட (ரோவர்) கலம் என மூன்று அமைப்புகள் இடம் பெற்றுள்ளன.
 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், திட்டமிட்ட சுமார் 45 நாள்கள் பயணித்து, செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை அடையும்.
 நிலவின் தென் துருவத்திலுள்ள இரண்டு மிகப் பெரிய பாறைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவதற்கு இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com