திருப்பதி கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு

திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலிலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவாமி தரிசனம் செய்தார்
திருப்பதி கோயிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு

திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலிலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
 காஞ்சிபுரம் அத்திவரதரைத் தரிசனம் செய்ய தில்லியில் இருந்து அவர் சென்னை வந்தார். அங்கிருந்து திருப்பதி விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் அவர் சனிக்கிழமை மாலை வந்தார். அவரை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி, சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயண் பரத் குப்தா, திருப்பதி நகர்ப்புற காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன், தேவஸ்தான திருப்பதி பிரிவு செயல் இணை அதிகாரி பசந்த்குமார் உள்ளிட்டோர் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றனர்.
 அதன்பின், குடியரசுத் தலைவர் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கபில தீர்த்தத்தில் அமைந்துள்ள கபிலேஸ்வர சுவாமி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின் இரவு 7 மணிக்கு திருமலைக்கு வந்தார். அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகை அருகில் தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று தங்கும் வசதியும், தரிசன ஏற்பாடும் செய்து கொடுத்தனர்.
 இரவு திருமலையில் தங்கிய அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.40 மணிக்கு வராக சுவாமியையும், காலை 6 மணிக்கு ஏழுமலையானையும் தரிசனம் செய்ய உள்ளார்.
 அதன் பின் திருமலையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர் மாலை 3 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்ல உள்ளார். அவர் திங்கள்கிழமை காலை 9.20 மணிக்கு அங்கிருந்து தில்லி புறப்படுவார் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com