தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து: 2 பெண்கள் உள்பட மூவர் பலி

தில்லி ஷாதராவில் உள்ள ரப்பர்-பிளாஸ்டிக் தொழிற்சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் இரு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
தில்லி தொழிற்சாலையில் தீ விபத்து: 2 பெண்கள் உள்பட மூவர் பலி

தில்லி ஷாதராவில் உள்ள ரப்பர்-பிளாஸ்டிக் தொழிற்சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் இரு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
 இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், "ஷாதராவில் ஜில்மில் தொழிற்சாலைப் பகுதியில் காலை 9 மணிக்கு ரப்பர்-பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பான தகவல் காலை 9.25 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 31 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கட்டடத்தில் சிக்கிய நபர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்றனர்.
 ஷாதரா காவல் துணை ஆணையர் மேக்னா யாதவ் கூறுகையில், "இரு பெண்கள் உள்பட 3 பேர், தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள், மஞ்சு, சங்கீதா, ஷோயப் என தெரிய வந்தது" என்றார்.
 கடந்த ஆண்டு ஜனவரியில், தில்லி பவானா தொழிற்சாலைப் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பெரிய அளவிலான தீ விபத்தில் 10 பெண்கள் உள்பட 17 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
 ரூ.5 லட்சம் நிவாரணம்: பிளாஸ்டிக் தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
 தீ விபத்து நிகழ்ந்த தொழிற்சாலையை, முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் நேரில் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் கேஜரிவால் கூறுகையில், "இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீயணைப்புத் துறை வீரர்கள் மிக அர்ப்பணிப்பாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்கள் இரண்டு பேரைக் காப்பாற்றியுள்ளனர். 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. இந்தத் தொழிற்சாலையில், தீ பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சரிவரப் பின்பற்றப்படவில்லை என தெரியவந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தில்லி அரசு சார்பில் நிவாரண உதவித் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்' என்றார்.
 விஜய் கோயல் குற்றச்சாட்டு: இதனிடையே, அந்த தொழிற்சாலையை மாநிலங்களவை பாஜக உறுப்பினர் விஜய் கோயல் பார்வையிட்டார். அவர் கூறுகையில், "தீ விபத்துகளை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கேஜரிவால் அரசு ஈடுபடுவதில்லை. மாறாக, தீ விபத்தால் மக்கள் உயிரிழந்த பிறகு உதவித் தொகை அறிவிப்பதில் மட்டுமே முதல்வர் ஆர்வத்துடன் உள்ளார். தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தைப் நான் பார்வையிட்டேன். அந்தக் கட்டடம் மிக மோசமான நிலையில் உள்ளது' என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com