பூஷண் பவர் அன்ட் ஸ்டீல் நிறுவனம் ரூ.1,775 கோடி கடன் மோசடி: அலாகாபாத் வங்கி தகவல்

பூஷண் பவர் அன்ட் ஸ்டீல் நிறுவனம் ரூ.1,774 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக அலாகாபாத் வங்கி, ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளது.

பூஷண் பவர் அன்ட் ஸ்டீல் நிறுவனம் ரூ.1,774 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக அலாகாபாத் வங்கி, ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளது.
 இந்த நிறுவனம் ரூ.3,805.15 கோடி மோசடி செய்துள்ளதாக, பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த வாரம் தெரிவித்துள்ள நிலையில், அதே நிறுவனத்தின் மீது அலாகாபாத் வங்கியும் குற்றம்சாட்டியுள்ளது.
 இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு அலாகாபாத் வங்கி அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பூஷண் பவர் அன்ட் ஸ்டீல் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையிலும், தணிக்கையின்போது கிடைக்கப்பெற்ற விவரங்களின் அடிப்படையிலும் அந்த நிறுவனத்தின் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், இந்த நிறுவனம், வங்கியில் இருந்து கடன் வாங்கிய தொகையை வேறு வழிகளில் பயன்படுத்தியதாகவும், வங்கிகளில் கடன் வாங்குவதற்காக பொய்யான கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ததாகவும் அலாகாபாத் வங்கி தெரிவித்துள்ளது.
 இந்த விவகாரம், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் முடியும் தருவாயில் உள்ளது. பூஷண் நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை வசூலிக்கப்பட்டு விடும் என்று அந்த வங்கி நம்பிக்கையுடன் உள்ளது.
 முன்னதாக, சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
 பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், ஐடிபிஐ வங்கி, யூகோ வங்கி ஆகிய வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை பூஷண் பவர் அன்ட் ஸ்டீல் நிறுவனம் தனது இயக்குநர்கள் மூலமாக 200க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளது. இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சய் சிங்கால், துணைத் தலைவர் ஆர்த்தி சிங்கால் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 ஒட்டுமொத்தமாக, இந்த நிறுவனம் கடந்த 2007 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், 33 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூ.47,204 கோடி வரை கடன் பெற்றுள்ளது. மேலும், அந்தக் கடன்தொகையை அந்த நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com