ம.பி: பழங்குடி மக்கள், வனத்துறை அதிகாரிகள் மோதல் விவகாரம்; நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்

மத்தியப் பிரதேச மாநிலம், பர்ஹான்பூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பழங்குடி விவசாயிகளை

மத்தியப் பிரதேச மாநிலம், பர்ஹான்பூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பழங்குடி விவசாயிகளை வெளியேற்றுவதற்காக துப்பாக்கிச்சூடு நடத்திய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி , காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் முதல்வர் கமல்நாத்திடம் சனிக்கிழமை வலியுறுத்தினர்.
 பர்ஹான்பூர் மாவட்டம், சிவால் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் பழங்குடி மக்கள் சிலர் பயிர் செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு வனத்துறை அதிகாரிகள் சென்றனர்.
 வனத்துறை நிலத்தில் இருந்து வெளியேறுமாறு வனத்துறை அதிகாரிகள் கூறியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்து, வனத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இதையடுத்து, பாதுகாப்புக்காக வனத்துறையினர், விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் 4 விவசாயிகள் காயமடைந்தனர்.
 இச்சம்பவம் தொடர்பாக குக்ஷி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஹீராலால் அலாவா முதல்வர் கமல்நாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 அவர் தெரிவித்திருப்பதாவது:
 வனத்துறையினர் பழங்குடி மக்களை தடுத்தபோது கடந்த 1988-89ஆம் ஆண்டில் பழங்குடிகள் வனஉரிமைச் சட்டத்தின்கீழ் வழங்கப்படட ஆவணத்தை சமர்ப்பித்துள்ளனர்.
 பாதிக்கப்பட்டவர்கள் வன உரிமைச்சட்டத்தின் கீழ் நிலம் கோருவோர் என்பதால், இதுதொடர்பான தங்களது எதிர்ப்பை வனத்துறை அதிகாரிகள் கிராம சபைக்கூட்டத்தில் தெரிவித்திருக்கலாம். அல்லது அவர்கள் மீது வனப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கலாம். ஆனால், வனத்துறை அதிகாரிகள் பழங்குடி மக்கள் மீது அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
 மேலும், இதுதொடர்பாக அவரது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், "முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்கும், அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும் முன்னுரிமை அளித்து வருகிறது.
 பர்ஹான்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம், தற்போதைய காங்கிரஸ் அரசின் கொள்கைகளுக்கு முரண்பாடானது. பழங்குடி விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது மட்டுமல்ல; சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 அதேபோல, ஜோதிராதித்ய சிந்தியா தனது சுட்டுரையில், "பழங்குடி மக்களின் முன்னேற்றம் மற்றும் நலத்திட்டங்களை மேம்படுத்துவதில் மத்தியப் பிரதேச அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. எதிர்பாராத வகையில் நடைபெற்ற இச்சம்பவம் வன்மையான கண்டனத்துக்குரியது. வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளவும், குற்றச்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கையும் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com