வெள்ள மீட்பு நடவடிக்கைக்கு என்டிஆர்எஃப் தயாராக வேண்டும்

வெள்ள மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்கும்படி தேசிய பேரிடர் மீட்புப் படையை (என்டிஆர்எஃப்) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
வெள்ள மீட்பு நடவடிக்கைக்கு என்டிஆர்எஃப் தயாராக வேண்டும்

வெள்ள மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்கும்படி தேசிய பேரிடர் மீட்புப் படையை (என்டிஆர்எஃப்) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
 அஸ்ஸாம், பிகார், மேகாலயம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் கனமழையினால், அந்த மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சனிக்கிழமை உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் அமித் ஷா பேசியபோது, வெள்ள மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்கும்படியும், அப்போதுதான் தேசிய பேரிடர் போன்ற சூழ்நிலை உருவாக்கும்போது அதை கையாள முடியும் என்று தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களையும், அவர்களது சொத்துகளையும் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார்.
 கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, இந்தத் தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மேலும் குழுக்கள் அனுப்பப்படும். மாநிலங்களுக்கு எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் மத்திய அரசு அளிக்கும்' என்றார்.
 மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அஸ்ஸாம், பிகாரில் கடந்த 3-4 நாள்களில் மிக அதிக மழை பெய்துள்ளது; அடுத்த 48 மணி நேரத்துக்கு மேலும் கனமழை எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com