கர்நாடக சட்டப்பேரவையில் 18-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் தொடர்ந்து வரும் நிலையில், சட்டப்பேரவையில் தமது அரசு மீது முதல்வர் குமாரசாமி வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கு கோரவுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர்.
கர்நாடக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர்.


கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் தொடர்ந்து வரும் நிலையில், சட்டப்பேரவையில் தமது அரசு மீது முதல்வர் குமாரசாமி வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கு கோரவுள்ளார்.
கர்நாடகத்தை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான ஆதரவை 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர். 
இதனிடையே,  13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 3 மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை திடீரென ராஜிநாமா செய்தனர். இதுபோல் அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால்,  ம.ஜ.த. -காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளது. 
224 எம்எல்ஏக்களைக் கொண்ட பேரவையில், 16 எம்எல்ஏக்களின் ராஜிநாமாவால் கூட்டணி அரசின் பலம் 101 ஆக குறைந்துள்ளது. இதனால், ராஜிநாமா கடிதங்களை திரும்பப் பெற வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசை காப்பாற்ற முதல்வர் குமாரசாமி, துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட ம.ஜ.த., காங்கிரஸ் தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில்,  சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 12ஆம் தேதி தொடங்கியுள்ளதால், முதல்நாள் கூட்டத்திலேயே தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதாக முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி பாஜக மனு: கேளிக்கை விடுதியில் இருந்து திங்கள்கிழமை விதான செளதாவுக்கு வருகை தந்த பாஜக எம்எல்ஏக்கள் ஜே.சி.மதுசாமி, கே.ஜி.போபையா, 
சி.எம்.உதாசி ஆகியோர் பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரைச் சந்தித்து, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதிகேட்டு கடிதம் கொடுத்தனர்.
இதன்பின்னர்,  பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
குமாரசாமி- எடியூரப்பா வாக்குவாதம்: இதில், ஜூலை 19-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்குமாறு முதல்வர் குமாரசாமி கேட்டுக் கொண்டதை கடுமையாக ஆட்சேபித்த எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, ஜூலை 16-ஆம் தேதியே  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார்.  
இதுதொடர்பாக முதல்வர் குமாரசாமிக்கும்,  எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. 

வெற்றி பெறுவேன்: குமாரசாமி நம்பிக்கை

முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவேன் என்ற முழு நம்பிக்கை உள்ளது. இதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்' என்றார்.

ஒத்திவைப்பும், வாக்கெடுப்பும்
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் அவையை நடத்தக் கூடாது என்றும் மீறி பேரவையை நடத்தினால், அதை பாஜக புறக்கணிக்கும் என்று எடியூரப்பா தெரிவித்தார்.  முடிவில், ஆளுங்கட்சியினர் முதலில் கேட்டுக்கொண்டதால் ஜூலை 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிப்பதாகவும், அதுவரை அவையை நடத்தவேண்டியதில்லை என்றும் பேரவைத்தலைவர் ரமேஷ்குமார் கூறினார். இரு தரப்பினரும்  இதை ஏற்றுக்கொண்டனர்.  பின்னர் சட்டப்பேரவை கூடியதும், அவையை ஜூலை 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு  ரமேஷ்குமார் ஒத்திவைத்தார்.

மேலவையில் பாஜக போராட்டம்
கர்நாடக  முதல்வர் குமாரசாமி தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சட்ட மேலவையில் பாஜக எம்.எல்.சி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து மேலவையை ஒத்தி வைப்பதாக அந்த அவையின் துணைத் தலைவர் தர்மே கெளடா தெரிவித்தார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை காவல்துறைக்கு கடிதம்
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது 18-ஆம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பை மும்பையிலுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் புறக்கணிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
இந்தத் தகவலை அதிருப்தி எம்எல்ஏக்கள் வட்டாரங்கள் தெரிவித்தன.
பதவி விலகல் தொடர்பான கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவரிடம் ஏற்கெனவே அளித்து விட்டோம். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கெடுக்க மாட்டோம் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
காவல்துறைக்கு கடிதம்: இதனிடையே, மும்பையில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆஸாத், கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் சந்திக்க வரலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மும்பை நகர காவல்துறை தலைவருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆஸாத் உள்ளிட்ட யாரையும் சந்திக்கத் தயாராக இல்லை எனக் கூறியுள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

5 அதிருப்தி எம்எல்ஏக்கள் மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
 கர்நாடகத்தைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரின் மனுவுடன் சேர்த்து, மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுவையும் செவ்வாய்க்கிழமை  (ஜூலை 16) விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்களான பிரதாப் கௌடா பாட்டீல், ரமேஷ் ஜார்கிஹோளி, நாராயண கௌடா, விஸ்வநாத், கோபாலய்யா, சோமசேகர், பி.சி. பாட்டீல், பைரதி பசவராஜ் உள்ளிட்ட 10 பேர் பதவியை ராஜிநாமா செய்தனர். இருப்பினும், அதை சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர். ரமேஷ் குமார் ஏற்கவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் 10 எம்எல்ஏக்களும் மனு தாக்கல் செய்தனர். இதன்மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், 16ஆம் தேதி மனு விசாரிக்கப்படும், அதுவரையிலும் ராஜிநாமா மீது எந்த முடிவையும் எடுக்கக் கூடாது, அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரையும் தகுதிநீக்கம் செய்யக் கூடாது என்று சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டது.
இதனிடையே, மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்களான ஆனந்த் சிங், கே. சுதாகர் ரெட்டி, என். நாகராஜ், முனிரத்னா, ரோஷன் பெய்க் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளனர். அதில் தங்களது ராஜிநாமாவை பேரவைத் தலைவர் கே.ஆர். ரமேஷ் குமார் ஏற்க மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு, 5 எம்எல்ஏக்களின் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, நிலுவையில் உள்ள 10 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுவுடன் சேர்த்து, இந்த மனுவையும் விசாரிக்க வேண்டும் என்றார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். 10 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுவுடன் சேர்த்து, 5 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுவையும் செவ்வாய்க்கிழமை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com