சித்து பதவி விலகியதால் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை: அமரீந்தர்  சிங்

அமைச்சர் பதவியை சித்து ராஜிநாமா செய்ததால் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்  சிங் தெரிவித்தார்.
சித்து பதவி விலகியதால் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை: அமரீந்தர்  சிங்


அமைச்சர் பதவியை சித்து ராஜிநாமா செய்ததால் அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்  சிங் தெரிவித்தார்.
பஞ்சாபில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் ஆட்சியில், உள்ளாட்சி, சுற்றுலா மற்றும் கலாசார விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்துவந்தார் சித்து. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அமைச்சரவையை முதல்வர் அமரீந்தர் சிங் மாற்றியமைத்தார்.
அப்போது, சித்துவிடம் இருந்த துறைகள் பறிக்கப்பட்டு, மின்சாரம் மற்றும் மரபு சாரா எரிசக்தித் துறை ஒதுக்கப்பட்டது.
அமரீந்தர் சிங்குடன் தொடக்கம் முதலே சித்து மோதல் போக்கை கடைப்பிடித்து வந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சித்து மட்டுமில்லாமல் வேறு சில அமைச்சர்களுக்கும் துறைகள் மாற்றியமைக்கப்பட்டன.
இந்நிலையில், தனது பதவியை சித்து திடீரென ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். ராஜிநாமா கடிதத்தையும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், சண்டீகரில் அமரீந்தர் சிங், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
சித்துவின் ராஜிநாமாவால், அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு என்று சில விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளன. அவற்றை பின்பற்றியாக வேண்டும். அமைச்சர்களின் செயல்பாட்டை கவனித்து வந்தேன். சில அமைச்சர்களுக்கு சில துறைகளை ஒதுக்கினால் சரியாக இருக்கும் என்று கருதி அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்தேன். பஞ்சாபில் மின்சாரத் துறை மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதுகிறேன். அதனால், சித்துவுக்கு அந்தத் துறையை ஒதுக்கினேன். ஆனால், அவர் அந்தத் துறையை வேண்டாம் என்று மறுக்கிறார். முடிவெடுத்துவிட்டால் அதை பின்பற்ற வேண்டுமே தவிர, எனக்கு இந்தத் துறை வேண்டும், அந்தத் துறை வேண்டும் என்று கூறக் கூடாது என்று நான் கூறினேன்.
ராணுவ அதிகாரி ஒருவர், தன்னை லடாக் பகுதியில் பணியமர்த்த வேண்டாம். மணிப்பூருக்கு அனுப்புங்கள் என்று கூறினால், எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது சித்துவின் பேச்சு. மற்ற அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையை ஏற்றுக் கொண்டனர். சித்துவுடன் எனக்கு எந்தவித மனக்கசப்பும் இல்லை.
மின்சாரத் துறையை அவர் முதலில் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். பின்னர், வேறு துறை வேண்டும் என்று அவர் கூறியிருந்தால் பரிசீலனை செய்திருப்பேன் என்றார் அமரீந்தர் சிங்.
முன்னதாக, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை அமரீந்தர் சிங் சந்தித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் 550ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் குறித்து பிரதமருடன் ஆலோசனையில் ஈடுபட்டேன்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com