வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: அஸ்ஸாமில் 26 லட்சம் பேர் பாதிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில் மழை-வெள்ளத்தால் சுமார் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள
அஸ்ஸாமின் காமரூப் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த ராஜபாரி கிராமத்தில் உள்ள பொதுக் கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்கும் பெண்.
அஸ்ஸாமின் காமரூப் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த ராஜபாரி கிராமத்தில் உள்ள பொதுக் கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்கும் பெண்.


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில் மழை-வெள்ளத்தால் சுமார் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர்பாக, முதல்வர் சர்வானந்த சோனோவாலுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொலைபேசியில் கேட்டறிந்தார்.
அஸ்ஸாமில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழையால், 31 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை-வெள்ளத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், சுமார் 26.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பார்பேடா மாவட்டத்தில் மட்டும் 7.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஸிரங்கா தேசிய பூங்காவில் 70 சதவீத பகுதிகள் மூழ்கியுள்ளன. இதனால், நீர்யானை உள்ளிட்ட விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவாலிடம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொலைபேசியில் பேசினார். அப்போது, வெள்ள நிலவரங்களை அவர் கேட்டறிந்தார். வெள்ள பாதிப்புகளை சமாளிக்க, அஸ்ஸாமுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய சர்வானந்த சோனோவால், வெள்ள பாதிப்புகளை எடுத்துரைத்தார். இதையடுத்து, அஸ்ஸாமுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு, தேசிய பேரிடர் மீட்பு படைக்கும், இதர அரசு அமைப்புகளுக்கும் அமித் ஷா உத்தரவிட்டார்.
மேகாலயத்தில் 1.14 லட்சம் பேர் பாதிப்பு: மேகாலயத்திலும் கடந்த 7 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பிரம்மபுத்திரா, ஜின்ஜிராம் ஆகிய இரு நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை-வெள்ளத்தால் மாநில முழுவதும் சுமார் 1.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிஸோரமில் 5 பேர் பலி: 
மிஸோரம் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com