2018-19 நிதியாண்டில் ரூ.38,000 கோடி மறைமுக வரி மோசடி: மத்திய அரசு தகவல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த 2018-19 நிதியாண்டில் சுமார் ரூ.38,000 கோடிக்கு வரி மோசடியில் ஈடுபட்டவர்களை வரி வசூலிப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித


சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த 2018-19 நிதியாண்டில் சுமார் ரூ.38,000 கோடிக்கு வரி மோசடியில் ஈடுபட்டவர்களை வரி வசூலிப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, 2018-ஆம் ஆண்டு மார்ச் வரை போலி ரசீது தாக்கல் செய்து வரிக்கழிவு கோரியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2018-19 நிதியாண்டில் போலி ரசீது மூலம் ரூ.11,251 கோடி அளவுக்கு வரிக்கழிவு கோரியது தொடர்பாக 1,620 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 154 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், போலி ரசீது வாயிலாக ரூ.2,805 கோடி வரிக்கழிவு கோரிய விவகாரத்தில் 666 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 41 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2017-18 நிதியாண்டின் ஜூலை முதல் மார்ச் வரையிலான காலத்தில், ரூ.1,216 கோடிக்கு வரி மோசடியில் ஈடுபட்ட 424 பேரை மத்திய சரக்கு-சேவை வரி வசூல் அதிகாரிகள் கண்டறிந்தனர். 
கடந்த நிதியாண்டில் ரூ.37,946 கோடிக்கு வரி மோசடி செய்த 7,368 பேரை அதிகாரிகள் கண்டறிந்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தனர். நடப்பு நிதியாண்டின் ஜூன் வரையிலான காலகட்டத்தில், வரி மோசடியில் ஈடுபட்ட 1,593 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி ரசீது தாக்கல் செய்வது, வரி மோசடியில் ஈடுபடுவது, வரி ஏய்ப்பில் ஈடுபடுவது போன்றவற்றைத் தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய மறைமுக மற்றும் சுங்க வரிகள் வாரியத்தில் இதற்கெனத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அனுராக் தாக்குர் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com