குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு


பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளிக்கிறது.
ஈரானிலிருந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குல்பூஷண் ஜாதவை அந்நாட்டு அதிகாரிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தொடுத்தது. ஈரானிலிருந்த குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் கடத்திவந்து கைது செய்ததாக இந்தியா குற்றஞ்சாட்டியது. 
இந்தியாவின் மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்து கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் குல்பூஷண் ஜாதவ் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் 4 நாள்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. 
அப்போது, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் செயல்பாடு சந்தேகத்துக்கிடமான வகையில் உள்ளதாகக் குற்றஞ்சாட்டிய இந்தியா, அந்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டது. இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும்' என பாகிஸ்தான் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், தி ஹேக் நகரிலுள்ள அமைதி அரண்மனையில் இந்திய நேரப்படி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு மூத்த நீதிபதி அப்துல்லாவி அகமது யூசுப் இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிடவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com