ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஆராய மீண்டும் வல்லுநர் குழு: பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான சாதக, பாதகங்களை ஆராய மீண்டும் வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று பேரவையில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். 
ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஆராய மீண்டும் வல்லுநர் குழு: பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு


ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான சாதக, பாதகங்களை ஆராய மீண்டும் வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று பேரவையில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். 
தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த பிரச்னையை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:
மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மக்களவையில் கனிமொழி உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை எனவும், ஹைட்ரோ கார்பனை எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏழு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றில் 2 திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும், திட்டப் பணிகள் நடந்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஏற்கெனவே இதுகுறித்து பிரச்னை எழுப்பியபோது, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதியே கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாநில அரசு ஒப்புதல் தரவில்லை என சட்டத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். அதனை இந்தக் கூட்டத் தொடரிலேயே எடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இந்தத் திட்டத்தால் விவசாயிகள் பதற்றமான சூழ்நிலையில் உள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவும் போராடினார். இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அமைச்சர் சி.வி.சண்முகம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பற்றி நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாங்களும் ஒத்துக் கொள்கிறோம். மத்திய அரசு புதிய கொள்கையின்படி ஒற்றை உரிமத்தின்படி, ஏலம் விட்டு விடுகிறார்கள். ஏலம் எடுப்பவர்கள், மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டு விடுகிறார்கள்.
மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டாலும், தமிழகத்தின் நிலப்பரப்பில் அந்தத் திட்டத்தை தொடங்க வேண்டுமென்றாலோ, ஆய்வு செய்ய வேண்டுமென்றாலோ, உற்பத்தி செய்ய வேண்டுமென்றாலோ, மாநில அரசின் 5 (1) விதியின்படி தமிழக அரசின் அனுமதியைப் பெற்றே தீர வேண்டும். மத்திய அரசிடம் ஏலம் எடுத்துள்ளவர்கள் தமிழக அரசுக்கு விண்ணப்பங்களை அளித்துள்ளனர். அதன் மீது, மாநில அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
ஏற்கெனவே கடந்த ஆட்சிக் காலத்தில் (திமுக) ஒப்புதல் அளிக்கப்பட்டு விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக, திட்டத்தை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று ஒப்பந்தங்களுக்கான அனுமதியை ரத்து செய்தார். அதே கொள்கையைத்தான் இன்றைக்கும் முதல்வர் எடுத்துள்ளார். தமிழக அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பங்களை அளித்திருந்தாலும், விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாகவும், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டம் என்பதாலும் முதல்வருடன் கலந்து ஆலோசித்து, ஜெயலலிதா எப்படி வல்லுநர் குழுவை அமைத்து சாதக, பாதகங்களை ஆராய்ந்து நிராகரித்தாரோ அதே மாதிரியான முறையை அரசு எடுக்கும்.
இல்லாத ஒன்றை இருப்பதைப் போன்று மக்களை அச்சுறுத்தி பயமுறுத்திக் கொண்டு போராட்டங்களை நடத்தினால், அதற்கு அரசு பொறுப்பாகாது. தமிழக அரசே எதிர்ப்பு தெரிவிக்கும்போது எதற்கு போராட்டம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விரும்பி சிறைக்குச் செல்வேன் என்று கூறினால், அதற்கு நாங்கள் என்ன செய்வது?.
மு.க.ஸ்டாலின்: அமைச்சரின் கருத்து விவசாயிகளை கொச்சைப்படுத்துவது போன்று உள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. விவசாயிகளைப் பாதுகாக்க ஒரு கொள்கை முடிவை எடுத்து தமிழக அரசு அறிவித்தால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.
அமைச்சர் சி.வி.சண்முகம்: யாரையும் கொச்சைப்படுத்துவது நோக்கம் அல்ல. திட்டத்துக்கு அனுமதி கிடையாது என தெள்ளத்தெளிவாக அறிவித்து விட்டோம். ஆனாலும், திட்டம் வந்து விட்டது, வந்து விட்டது எனக் கூறி அரசியலுக்காக நடத்தப்படும் போராட்டங்களுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் எந்தத் திட்டத்துக்கும் அந்த மாநில அரசின் அனுமதி தேவை. அனுமதி பெறாமல் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் திட்டத்தைத் தொடங்க முடியாது. அப்படித் தொடங்கினால் அதனைத் தடுத்து நிறுத்த நமக்கு உரிமை உள்ளது. அதையும் மீறித் தொடங்கினால், சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com