என்ஐஏ அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்கள்: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறியது.
என்ஐஏ அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்கள்: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. மக்களவையில் ஏற்கெனவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பு (திருத்த) மசோதா என்ற அந்த மசோதா, மக்களவையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையிலும் அந்த மசோதா ஒருமனதாக புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத் திருத்த மசோதா மூலம், வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், இந்தியர்களின் சொத்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரத்தை என்ஐஏ அமைப்புக்கு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆள் கடத்தல், கள்ள ரூபாய் நோட்டுகள், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை விற்பனை செய்தல் மற்றும் தயாரித்தல், சைபர் தீவிரவாதம், 1908ஆம் ஆண்டு வெடிப் பொருள்கள் தடை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றங்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தும் அதிகாரமும், என்ஐஏ அமைப்புக்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. மஜித் மேனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே. ரெங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. வினய் விஷ்வம், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் பேசினர். காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி பேசியபோது, சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சுவாமி அசிமானந்த் மற்றும் 3 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் என்ஐஏ தோல்வியடைந்து விட்டதென சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். என்ஐஏ அமைப்பிடம் இருக்கும் தீவிரவாதம் தொடர்பான 48 வழக்குகளில், 23இல் குற்றப்பத்திரிகை இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். டி.கே. ரெங்கராஜன் தலைமையிலான இடதுசாரி எம்.பி.க்கள் பேசுகையில், "என்ஐஏ சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்' என வலியுறுத்தினர். இதை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் நிராகரித்து விட்டார். 

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவாதத்துக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: என்ஐஏ அமைப்பின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்புவது கண்டிக்கத்தக்கது. மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில் 184 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சம்ஜௌதா ரயிலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகை அடிப்படையில்தான் அரசு தரப்பு வாதிட்டது. குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல், அந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே அந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது தீவிரவாதிகள் யாரேனும் தாக்குதல் நடத்தினால், அதன்மீது என்ஐஏ இனி நடவடிக்கை எடுக்கும். அதேநேரத்தில், இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த மோடி அரசு அனுமதிக்காது என உறுதியளிக்கிறேன் என்றார்.

அப்போது இந்த மசோதா, பாகிஸ்தானுக்கும் பொருந்துமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "துல்லியத் தாக்குதல், விமானப்படை தாக்குதல் மூலமாக, எதிரி நாட்டின் பகுதியிலும் இந்தியாவால் தாக்குதல் நடத்த முடியும் என்பதை மோடி அரசு நிரூபித்துள்ளது. ஆதலால் பாகிஸ்தான் குறித்து கவலைப்பட தேவையில்லை' என்றார்.

என்ஐஏ அமைப்பால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களையும் அமித் ஷா பட்டியலிட்டார்.

முன்னதாக, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தங்களது கோரிக்கையை நிராகரித்து விட்டதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை இடதுசாரி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com