
கருப்புப் பண மோசடி வழக்கில் தனக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடுமாறு கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை, தொழிலதிபர் ராபர்ட் வதேரா வியாழக்கிழமை திரும்பப் பெற்றார்.
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் தனக்கு முன்ஜாமீன் வழங்கியதை அடுத்து, அமலாக்கத் துறைக்கு எதிரான தனது இந்த மனுவை ராபர்ட் வதேரா திரும்பப் பெற்றுள்ளார். இதையடுத்து, நீதிபதிகள் மன்மோகன், சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரது அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்னதாக, கருப்புப் பண மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி ராபர்ட் வதேரா தாக்கல் செய்த மனு நிலுவையில் இருந்த நிலையில், அந்த மனுவோடு சேர்த்து அமலாக்கத் துறைக்கு எதிரான இந்த மனுவை வதேரா தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "விசாரணை அமைப்புகளின் சட்டரீதியான அதிகாரத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஒரே வழக்கில் பல்வேறு விசாரணைகள் நடைபெறுகின்றன. மேலும், ஒரே வழக்கு தொடர்பாக இரண்டாவதாக, கூடுதலாக ஒரு முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று ராபர்ட் வதேரா கோரியிருந்தார்.
இந்நிலையில், வதேராவின் இந்த மனுவை விசாரிப்பது தொடர்பான தனது பதிலை அமலாக்கத் துறை தாக்கல் செய்திருப்பதாக அதன் வழக்குரைஞர் அமித் மகாஜன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து அமலாக்கத் துறையின் பதில் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வதேராவுக்கு அவகாசம் அளித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
வதேராவின் நெருங்கிய உதவியாளரான மனோஜ் அரோராவும், தனக்கு எதிரான கருப்புப் பண மோசடி வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள சொத்துகளை சட்ட விரோதமாக வாங்கியதற்காக, ராபர்ட் வதேரா மீது கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அவரைக் கைது செய்து விசாரிக்க அமலாக்கத் துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.