
தனியார் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் தலைமையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று நீதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற இந்திய முதலீடு கருத்தரங்கு நிகழ்ச்சியில் பேசியபோது, இதை அவர் தெரிவித்தார். இதுகுறித்து ராஜீவ் குமார் மேலும் கூறியதாவது:
தனியார் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் தலைமையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் மிக முக்கிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. அந்த முயற்சி வெற்றியடைந்தால், இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைவதை அனைவரும் காணலாம். காப்பீட்டு துறை, சிவில் விமானப் போக்குவரத்து, ஊடகம் போன்ற துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டு விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
விவசாயத் துறையில் அமைப்பு ரீதியில் சீர்திருத்தம் மேற்கொள்ள அரசு
ஆலோசித்து வருகிறது என்றார்.