கர்நாடகத்தில் இழுபறி தொடருகிறது: பேரவை ஒத்திவைப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது  நம்பிக்கை வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்படாததால், மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்து பேசும் முதல்வர் குமாரசாமி.
கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்து பேசும் முதல்வர் குமாரசாமி.

கர்நாடக சட்டப்பேரவையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது  நம்பிக்கை வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்படாததால், மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.

பரபரப்பான சூழலில் பெங்களூரு விதான செüதாவில் கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கியதும், நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்யுமாறு முதல்வர் குமாரசாமியை பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் கேட்டுக் கொண்டார்.

முதல்வர் குமாரசாமி பேசத்தொடங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா குறுக்கிட்டு, " நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஒரே நாளில் நடத்த வேண்டும்; 1995, 1998, 2006, 2008, 2010-ஆம் ஆண்டுகளில் இதே அவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புகள் ஒரேநாளில் நடத்தப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் குமாரசாமி பேசியதாவது:

இந்த அவையில் பல்வேறு காலகட்டங்களில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  ஆனால், நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்ததற்கான அன்றைய நிலை வேறு; இன்றைய நிலை வேறு. கர்நாடகத்தில் எழுந்துள்ள அரசியல் நிலையை ஒட்டுமொத்த நாடே கூர்ந்து கவனித்துவருகிறது.

ஆட்சி, அதிகாரம் நிலையானது என்ற நினைப்பில் நான் இல்லை என்றார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, ஒழுங்கு பிரச்னையைக் கொண்டுவந்தார்.  இதைத் தொடர்ந்து, நண்பகல் 1.45 மணி,  மாலை 4 மணி, மாலை 5.45மணிக்கு அவை அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியபடி இருந்ததைத் தொடர்ந்து,  மாலை 6.14 மணிக்கு அவை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பேரவைக்கு வராத 20 எம்எல்ஏக்கள்: ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 20 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்களில், 12 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

ஆளுநரிடம் புகார்: கர்நாடக சட்டப்பேரவையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை  வாக்கெடுப்பை நடத்தாமல் ஆளும் கட்சி காலம் கடத்துவதாக ஆளுநரிடம் பாஜக புகார் அளித்தது.

ஆளுநர் வஜுபாய் வாலாவை முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பசவராஜ்பொம்மை, விஸ்வநாத், அரவிந்த் லிம்பாவளி, பாஜக மாநில பொதுச் செயலாளர் ரவிகுமார் அடங்கிய பாஜக குழுவினர் வியாழக்கிழமை சந்தித்து, நம்பிக்கை தீர்மானம் தொடர்பாக புகார் மனுவை அளித்தனர். இதையடுத்து, அவையின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு அதிகாரி ஒருவரை ஆளுநர் அனுப்பியிருந்தார். அவ்வாறு அதிகாரியை அனுப்புவதற்கு அதிகாரமுள்ளதா என கேள்வி எழுப்பி காங்கிரஸ்,  மஜத உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். இந்த விவகாரத்தால் கூச்சல், குழப்பம் நிலவியதால், அவை ஒத்திவைக்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு தோற்கடிக்கப்படும்- எடியூரப்பா:  கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கு 100 சதவீதம் தோற்கடிக்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா நம்பிக்கையுடன் கூறினார்.

தீர்மானத்தை ஒத்திவைக்க காங்கிரஸ் கோரிக்கை:  கொறடா உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை காரணம்காட்டி பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை தீர்மானத்தை ஒத்திவைக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்து குமாரசாமி பேசிக்கொண்டிருந்தபோது,  குறுக்கிட்டுப் பேசிய சித்தராமையா, "அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட கூட்டணி அரசைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது. அப்படியிருக்கையில், 10-ஆவது அட்டவணையை புறந்தள்ளிவிட்டு, சட்டப்பேரவைக்கு வருவதை 15 எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது என்பது சரியல்ல. கொறடா உத்தரவு கொடுத்தால், அதை மதிக்க வேண்டியது எங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்களுக்கு கட்டாயமாகும்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகி விளக்கம் கிடைக்காத நிலையில், நம்பிக்கை தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும். எனவே, தற்போதைக்கு நம்பிக்கை தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது' என்றார். இதையடுத்து, காங்கிரஸ்-பாஜக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பாஜக உள்ளிருப்பு போராட்டம்

கர்நாடக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெறாததைக் கண்டித்து, பாஜகவினர் பேரவையில்  உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, அவையில் எடியூரப்பா பேசியதாவது:
நம்பிக்கை தீர்மானத்தின் மீது வியாழக்கிழமையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் தகவல் அளித்த பிறகும், காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் காலை முதல் மாலை வரை கால விரயம் செய்து அவையை நடத்தவிடாமல் செய்துவிட்டனர். இதை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் இரவு முழுவதும் சட்டப்பேரவையிலே தங்கியிருந்து, உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம். நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 15 நிமிடங்கள்கூட விவாதம் நடத்தவில்லை. ஆளும் கூட்டணி உறுப்பினர்கள், நம்பிக்கை தீர்மானத்துக்கு சம்பந்தமில்லாத விவகாரங்களை முன்வைத்து நேரத்தை வீணடித்துவிட்டனர். பேரவையில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் இருந்தன என்றார் அவர்.

பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு ஆளுநர் கெடு

கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதல்வருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 175(2)-இன்படி கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30 மணிக்குள் முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். நம்பிக்கை தீர்மானத்தின் மீது பேசுவதற்கு அனைவருக்கும் பேரவைத் தலைவர் அனுமதி அளிக்க வேண்டும்.
காங்கிரஸ்-மஜத கட்சிகளைச் சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ததாலும், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதாலும், குமாரசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்து விட்டதாகவே தெரிகிறது என்று அந்தக் கடிதத்தில்  ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com