காவிரிக்காக நீதிமன்றத்தில் முறையிடுங்கள்; மக்களவையில் மோதாதீர்கள்: ஓம் பிர்லா

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நீதிமன்றத்திலோ, தீர்ப்பாயத்திலோ முறையிடுங்கள்; மக்களவையில் மோதாதீர்கள்' என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார்.  
காவிரிக்காக நீதிமன்றத்தில் முறையிடுங்கள்; மக்களவையில் மோதாதீர்கள்: ஓம் பிர்லா

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நீதிமன்றத்திலோ, தீர்ப்பாயத்திலோ முறையிடுங்கள்; மக்களவையில் மோதாதீர்கள்' என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார்.  
மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசிய கர்நாடக எம்.பி. ஷோபா கரந்த்லஜே, தனது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிட்டார். 
மேலும், அண்டை மாநில உறுப்பினர்களை சுட்டிக் காட்டி கர்நாடகம்-தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தையும் பேசினார். 
அதையடுத்து அவரை இடைமறித்த அவைத் தலைவர் ஓம் பிர்லா, "காவிரி விவகாரத்துக்காக நீதிமன்றத்திலோ, தீர்ப்பாயத்திலோ முறையிடுங்கள்; மக்களவையில் மோதாதீர்கள்' என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. 
இதையடுத்து மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாவது: 
பல்வேறு மாநிலங்கள் இடையேயான நதிநீர் பகிர்வு குறித்த விவகாரங்கள் நீதிமன்றங்களிலோ, தீர்ப்பாயங்களிலோ நிலுவையில் உள்ளன. 
அந்த விவகாரங்களில் தீர்வு காண்பதற்கு மாநிலங்களிடையேயான ஒத்துழைப்பு அவசியமாகும். 
நீர் சக்தி திட்டத்தின் கீழ், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ள 256 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1,592 ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
அவற்றில், 312 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் இல்லாமல் போகும் அபாயத்தில் இருப்பதாகவும், 1,186 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் அதிகமாக உரிஞ்சப் பட்டுள்ளதாகவும், 94 ஒன்றியங்களில் மிகக் குறைந்த அளவே நிலத்தடி நீர் மட்டம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 
மாநிலங்கள் அளித்துள்ள தகவலின்படி, நாட்டில் ஊரகப் பகுதிகளில் மொத்தம் உள்ள 17.87 கோடி வீடுகளில், சுமார் 3.27 கோடி வீடுகள் (18.33 சதவீதம்) குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் பெறுகின்றன. 
மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்டதுபோல, 2024-ஆம் ஆண்டுக்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com