மழை வெள்ளம்: வடகிழக்கு மாநிலங்களில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது: கேரளத்துக்கு "ரெட் அலர்ட்'

வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. கேரள மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிக அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக "ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
பிகார் மாநிலத்தில் உள்ள சீதாமரி நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பொதுமக்கள்.
பிகார் மாநிலத்தில் உள்ள சீதாமரி நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பொதுமக்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. கேரள மாநிலத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிக அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக "ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் கன மழையால், அங்குள்ள பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தில் காகர் ஆற்றில் ஓடிய வெள்ள நீர், அருகிலுள்ள விவசாய நிலத்துக்குள் புகுந்துள்ளது. இதனால் 2,000 ஏக்கர் விவசாய நிலத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
பிகார் மாநிலத்தில் மழை வெள்ளத்துக்கு இதுவரை 78 பேர் பலியாகியுள்ளனர். சீதாமரி மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியிலும், அதன் கிளை நதிகளிலும் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடுகிறது. இதனால் அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 28 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, பார்படா மாவட்டம் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. 28 மாவட்டங்களில் வசிக்கும் 54 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரை அஸ்ஸாம் மாநிலத்தில் மழை வெள்ளத்துக்கு 36 பேர் பலியாகியுள்ளனர்.
புகழ்பெற்ற காஸிரங்கா தேசிய வனவிலங்கு சரணாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கு பராமரிக்கப்பட்டு வந்த விலங்குகள் சில தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.  2.26 லட்சம் பேர், 1,080 நிவாரண முகாம்களிலும், 689 நிவாரண விநியோக மையங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், 24 மணி நேரமும் இடைவிடாமல் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேகாலயத்தில் மழை வெள்ளத்துக்கு மேலும் 2 பேர் வியாழக்கிழமை பலியாகினர். இதனால் அந்த மாநிலத்தில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, கேரள மாநிலத்துக்கு மிக அதிக கனமழை தொடர்பாக இந்திய வானிலை மையம் "ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களில் அடுத்த 2 முதல் 3 நாள்களுக்கு 20 சென்டி மீட்டர் அளவுக்கு மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், பிற மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், மழை பெய்யும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் உதவும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com