அஸ்ஸாமில் வடியத் தொடங்கியது வெள்ளம்: பலி எண்ணிக்கை 59 ஆனது

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடியத் தொடங்கியது.
அஸ்ஸாமில் வடியத் தொடங்கியது வெள்ளம்: பலி எண்ணிக்கை 59 ஆனது

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ள நீர் வடியத் தொடங்கியது. மழை, வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 59-ஆக அதிகரித்துள்ளது. 

அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில், 24 மாவட்டங்கள் இன்னும் வெள்ள நீரில் தத்தளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி, பக்சா, ஹோஜாய், மஜுலி மாவட்டங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளபோதும், 1.51 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களும், காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவின் பெரும்பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அளித்த தகவலின்படி, சனிக்கிழமை மட்டும் மோரிகான் மாவட்டத்தில் 5 பேரும், பார்பேட்டாவில் 3 பேரும், தெற்கு சல்மாராவில் இருவரும், நல்பாரி மற்றும் துப்ரி மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். 

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 3,024 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தேமாஜி, லகிம்பூர், விஸ்வநாத், சோனித்பூர், தாரங், பார்பேட்டா, நல்பாரி, சிராங், போங்காய்காவ்ன், கோக்ரஜார், துப்ரி, தெற்கு சல்மாரா, கோல்பாரா, காமரூப், மோரிகான், நகாவ்ன், கர்பி அங்லாங், கோலாகாட், ஜோர்ஹாட், திப்ருகர், தின்சுகியா உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 44 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுமார் 1.32 லட்சம் பேர் 689 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 240 நிவாரண விநியோக மையங்களை மாவட்ட நிர்வாகங்கள் அமைத்துள்ளன. ஜோர்ஹாட், கோலாகாட், நாகாவ்ன் ஆகிய மாவட்டங்களில் பிரம்மபுத்ரா நதி அபாய அளவைத் தாண்டிப் பாய்கிறது. 

லோயர் அஸ்ஸாம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பெரிய அளவில் வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இடைவிடாது மழை பெய்து வரும்போதிலும், 488 பேர் மீட்கப்பட்டதாகவும், சுமார் 450 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உறைவிட வசதியும், நிவாரணப் பொருள்களும் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு மாநில நிதியமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவுறுத்தியுள்ளார்.  பக்சா, நல்பாரி, பார்பேட்டா, தேகியாஜுலி, மோரிகான் மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. வெள்ள நீர் வடிந்த பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். 

காஸிரங்கா உயிரியல் பூங்காவில் வெள்ள நீரின் அளவு 138 சென்டி மீட்டராகக் குறைந்துள்ளது. அங்கு கடந்த 13-ஆம் தேதி முதல் இதுவரையில், 10 காண்டாமிருகங்கள், பல்வேறு வகையிலான 85 மான்கள், 8 காட்டுப் பன்றிகள், ஒரு யானை உள்பட 129 விலங்குகள் உயிரிழந்துள்ளன. 

பிகார்: பிகாரில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 97-ஆக உள்ளது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட சீதாமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 27 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. 

மாநில துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி, சீதாமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சனிக்கிழமை பார்வையிட்டார். பிகாரில் மொத்தம் 12 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் சனிக்கிழமை பெய்த மழை காரணமாக அங்குள்ள 7 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளன. இதனால் அங்குள்ள பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com