இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக, கட்சியின் தேசியச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா பொறுப்பேற்கவுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகிறார் டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக, கட்சியின் தேசியச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா பொறுப்பேற்கவுள்ளார்.

தற்போது கட்சியின் பொதுச் செயலாளராகவுள்ள எஸ்.சுதாகர் ரெட்டி உடல் நிலையைக் காரணம் காட்டி தனது பதவியை ராஜிநாமா செய்வதற்கு விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, அந்தப் பதவிக்கு டி.ராஜா நியமிக்கப்படவுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்கள் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. அதில், கேரளத்தைச் சேர்ந்த பினோய் விஸ்வம் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அமர்ஜீத் கெளர், அதுல் குமார் அஞ்சன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு டி.ராஜாவை நியமிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது. 

இந்தக் கூட்டத்தின் முடிவில், டி.ராஜாவை பொதுச் செயலாளராக நியமிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.ராஜா, கட்சியின் தேசிய செயற்குழுவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்து வருகிறார். இவரது மனைவி ஆனி ராஜாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர், கட்சியின் மகளிர் அணியான இந்தியப் பெண்களுக்கான தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக  உள்ளார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவரான சுதாகர் ரெட்டி, கேரள மாநிலம், கொல்லத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சியின் 23-ஆவது மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராக 3-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, பதவியை ராஜிநாமா செய்வதாக அவ்வப்போது கூறி வந்தார். 

மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, பதவி விலகும் விருப்பத்தை மீண்டும் தெரிவித்தார். இதையடுத்து, கட்சியின் அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com