கர்நாடக கூட்டணி அரசைக் காப்பாற்ற அதிருப்தி எம்எல்ஏக்களிடம் சமாதான முயற்சி

கர்நாடகத்தில் கூட்டணி அரசைக் காப்பாற்ற அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கர்நாடக கூட்டணி அரசைக் காப்பாற்ற அதிருப்தி எம்எல்ஏக்களிடம் சமாதான முயற்சி

கர்நாடகத்தில் கூட்டணி அரசைக் காப்பாற்ற அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள், கடந்த ஜூலை 1 முதல் 12-ஆம் தேதிக்குள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனிடையே,  2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று,  அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். 

ராஜிநாமா செய்திருந்த எம்எல்ஏக்களில் 12 பேர், கடந்த 6-ஆம் தேதி மும்பைக்கு தனி விமானத்தில் சென்று ரேனைசன்ஸ் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர்.இவர்களைச் சமாதானப்படுத்தி மீண்டும் பெங்களூருக்கு அழைத்து வர அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், ஜி.டி.தேவெ கெளடா ஆகியோர் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. 

எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகிய இருவரையும் சமாதானப்படுத்த முன்னாள் முதல்வர் சித்தராமையா நேரடியாக மேற்கொண்ட முயற்சியும் பயனளிக்கவில்லை. 

தங்கள் ராஜிநாமா முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறி வருகிறார்கள்.இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்ஏ ராமலிங்க ரெட்டி தனது ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

ஆனால், பெங்களூரு, யஷ்வந்த்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீமந்த் பாட்டீல், மும்பைக்கு தப்பிச் சென்று,  உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். 

ஸ்ரீமந்த் பாட்டீலை பாஜகவினர் கடத்தி விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.இந்த நிலையில்,  முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 2 நாள்களாக விவாதம் நடைபெற்று வருகிறது.  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவையின் விவாதம் வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஆளுநர் வஜுபாய்வாலா விதித்திருந்த இரண்டு கெடுவையும் பொருள்படுத்தாத மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு,  தனது அரசைக் காப்பாற்ற கடைசிக்கட்ட முயற்சிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக கர்நாடக சட்டப்பேரவையை ஜூலை 22-ஆம் தேதி வரை ஒத்திவைக்கும் முயற்சியில் கூட்டணி அரசு தற்காலிகமாக வெற்றியடைந்துள்ளது.

இதனிடையே,  ஜூலை 22-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியே தீருவது என்ற முடிவை பேரவைத் தலைவரிடம் தெரிவித்து,  2 நாள் கால அவகாசத்தைப் பெற்றுள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு,  தனது ஆட்சியைக் காப்பாற்ற அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

மும்பையில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களிடம் பேசுவதற்கு மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர்கள் மிலிந்த் தியோரா, சஞ்சய் நிரூபம், கர்நாடக மேலிடப் பொறுப்பாளர் யசோமதி தாக்கூர் ஆகியோர் கடைசிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com