சோன்பத்ரா நிலத் தகராறில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பிரியங்காவுடன் சந்திப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ராவில் கிராமத் தலைவருடன் ஏற்பட்ட நிலத்தகராறில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர், மிர்ஸாபூரில் பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டிருந்த
உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ராவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா.
உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ராவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா.

உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ராவில் கிராமத் தலைவருடன் ஏற்பட்ட நிலத்தகராறில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர், மிர்ஸாபூரில் பண்ணை வீட்டில் காவலில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவை  சனிக்கிழமை சந்தித்தினர்.

சோன்பத்ராவில் நிலத்தகராறு ஏற்பட்ட கிராமத்துக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க பிரியங்கா
வெள்ளிக்கிழமை முயன்றார்.

ஆனால், அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி அருகில் உள்ள மிர்ஸாபூர் பண்ணை வீட்டில் காவலில் வைத்தனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் செல்ல மாட்டேன் என்று கூறி, வெள்ளிக்கிழமை இரவு அவர் பண்ணை இல்லத்திலேயே தங்கினார்.

இந்நிலையில், பிரியங்காவை பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை சந்தித்தனர். அப்போது, அவர்களின் கண்ணீரை துடைத்துவிட்டு அருந்துவதற்கு குடிநீர் அளித்து ஆறுதல் வார்த்தைகளை கூறினார் பிரியங்கா.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் ராய் கூறுகையில், "பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பிரியங்காவைச் சந்தித்தனர்' என்றார்.

முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் திரும்ப வேண்டும் என்று வாராணசி காவல் துறை கூடுதல் டிஜி பிரிஜ் பூஷண், காவல் துறை ஆணையர் தீபக் அகர்வால் ஆகியோர் வலியுறுத்தியதாக பிரியங்கா சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் சில பதிவுகளை சுட்டுரையில் வெளியிட்டார்.

அதில், "என்னை போலீஸார் காவலில் வைத்துள்ளது சட்டவிரோதமானது என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை துடைத்துவிட்டதும் குற்றமாக கருதப்படுமா?' என்று குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை காலை 4.30 மணி அளவில் கட்சியினருடன் பிரியங்கா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரசு அதிகாரிகள் அவருக்கு காலை உணவை அளிக்கவில்லை. கட்சியினரும், உள்ளூர்வாசிகளும் காலை உணவு தயார் செய்து அளித்தனர் என்று காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததை அடுத்து, பிரியங்கா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என்ற எனது குறிக்கோள் நிறைவேறிவிட்டது என்பதை சிலருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் இங்கிருந்து புறப்படுகிறேன். ஆனால், மீண்டும் ஒரு நாள் வருவேன்' என்றார்.

முன்னதாக, உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக்கிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பிரியங்கா பார்த்து ஆறுதல் தெரிவிக்க மாநில அரசை அனுமதிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மனு அளித்தனர்.

"மின்சாரம், தண்ணீர் இல்லாத பண்ணை வீட்டில் பிரியங்கா காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியில் உத்தரப் பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முகநூலில் குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com