தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் மாரடைப்பு ஏற்பட்டு சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 81. அவரின் மறைவுக்கு தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் மாரடைப்பு ஏற்பட்டு சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 81. அவரின் மறைவுக்கு தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் உள்ள போர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் ஷீலா தீட்சித் சனிக்கிழமை காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையில் பிற்பகல் 3.55 மணியளவில் ஷீலா தீட்சித்தின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் ஷீலா தீட்சித் சனிக்கிழமை காலை சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. இதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை தற்காலிகமாக சீரானது. எனினும், ஷீலா தீட்சித்துக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சைகள் அளித்தும் பயனில்லாமல், ஷீலா தீட்சித் மதியம் 3.55 மணியளவில் உயிரிழந்தார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வராக 15 ஆண்டுகள்: தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் பதவி வகித்தார். இதற்கு முன்பு, தில்லி மாநில முதல்வராக கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநராகவும் அவர் பணியாற்றினார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு தில்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். மக்களவைக்கு கடந்த 1984ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். ராஜீவ் காந்தியின் மத்திய அமைச்சரவையிலும் அவர் அங்கம் வகித்தார்.

ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். சுட்டுரையில் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள பதிவுகளில், "தில்லி முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் தலைவராக விளங்கியவருமான ஷீலா தீட்சித் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். முதல்வராக அவர் பதவி வகித்த காலத்தில் தலைநகர் மிகப்பெரிய மாற்றம் அடைந்தது. இதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்' என்றார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள பதிவுகளில், "ஷீலா தீட்சித் சிறந்த நிர்வாகி ஆவார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தம், இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில், "ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம்; தில்லி வளர்ச்சிக்கு அவர் மிகப்பெரும் பங்களிப்பு அளித்துள்ளார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மோடி நேரில் மரியாதை: இதன்பின்னர் ஷீலா தீட்சித்தின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு பிரதமர் மோடி இறுதி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட காங்கிரஸ் தலைவரை நாடு இழந்து விட்டது' என்று தெரிவித்துள்ளார்.

தில்லியில் சனிக்கிழமை ஷீலா தீட்சித்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து 
அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.

காங்கிரஸின் அன்புக்குரிய மகள் ஷீலா தீட்சித் - ராகுல்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவுகளில், "காங்கிரஸின் அன்புக்குரிய மகளாக விளங்கிய ஷீலா தீட்சித்தின் மறைவு குறித்து கேள்விப்பட்டு இடிந்து போயுள்ளேன். இந்த துயரமான நேரத்தில், அவரது குடும்பத்துக்கும், 3 முறை முதல்வராக அவர் பதவி வகித்த மாநிலமான தில்லியை சேர்ந்த குடிமக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சுட்டுரைப் பக்கத்திலும் ஷீலா தீட்சித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஷீலா தீட்சித்தின் உடலுக்கு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஒடிஸா முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

ஷீலா தீட்சித் மறைவைத் தொடர்ந்து தில்லி அரசு சார்பில் 2 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com