ம.பி.யில் செயற்கை பால் தயாரித்து மோசடி: 62 பேர் கைது

மத்தியப் பிரதேசத்தில் செயற்கை பால் மற்றும் பால் பொருள்கள் தயாரித்து மோசடி செய்த 62 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் செயற்கை பால் மற்றும் பால் பொருள்கள் தயாரித்து மோசடி செய்த 62 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக, காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் பதோரியா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மத்தியப் பிரதேச மாநிலம், மோரேனா மாவட்டத்திலுள்ள அம்பா பகுதியில் காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, அப்பகுதியில் செயல்பட்டு வந்த நிறுவனம் ஒன்று, செயற்கையான முறையில் பல்வேறு வேதிப்பொருள்களைக் கலந்து பால் மற்றும் பால் உற்பத்திப் பொருள்களைத் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வேதிப்பொருள்கள் அனைத்தும் அதிக நச்சுத்தன்மை கொண்டவை ஆகும். இதையடுத்து, அந்நிறுவனத்தைச் சேர்ந்த 62 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செயற்கையான முறையில் தயாரித்த பால், அதைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பால்கோவா உள்ளிட்ட பொருள்களை தில்லி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு அவர்கள் விநியோகம் செய்து வந்ததாகத் தெரிவித்தனர். பால் உள்ளிட்ட பொருள்களைப் பதப்படுத்த, வழக்கத்துக்கு அதிகமான வேதிப்பொருள்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து செயற்கைப் பால் அடங்கிய 20 வாகனங்கள், பால் விநியோகிக்கப் பயன்படும் 11 வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பதப்படுத்தும் பொருள்கள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சோப்புப் பொருள்கள், ஷாம்பூ, சோடியம் தையோசல்ஃபேட் உள்ளிட்ட வேதிப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார் ராஜேஷ் பதோரியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com