கேரளாவில் கன மழை: மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கேரளாவில் கன மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கன மழை: மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


திருவனந்தபுரம்: கேரளாவில் கன மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கண்ணூர், கோட்டயம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திட்டமிட்டபடி பல்கலைக்கழக தேர்வுகள் இன்று வழக்கம் போல நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து. 

கேரளத்தில் பருவமழை தீவிரடைந்துள்ள நிலையில், அங்கு மழை தொடர்பான சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் சிலரது நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. இவர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கேரளத்தின் காசர்கோடு, இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்ட கடல்பகுதியில் ஒரு மீனவரின் உடல் மீட்கப்பட்டது. அவர் தமிழகத்தைச் சேர்ந்த சகாயராஜு (55) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவருடன் சேர்ந்த மேலும் இருவர் நீந்தி கரை தப்பினர். கோட்டயம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் மகேஷ் செபாஸ்டியன் என்பவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. அவருடன் சென்ற மேலும் சிலரைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். இது தவிர மழையால் தென்னை மரம் சரிந்து விழுந்து ஒருவரும், ஆற்றில் மூழ்கி ஒருவரும் உயிரிழந்துவிட்டனர்.

மழை பாதித்த பகுதியில் இதுவரை 12 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் தங்கியிருந்தவர்கள் இந்த முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 22) வரையும், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) வரையும் "ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்குமாறு அதிகாரிகள் அறுவுறுத்தியுள்ளனர். 

மேலும், வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கேரள அரசு எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடுக்கி மாவட்டத்தில் மலைப் பகுதி கிராமங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் பயிர்ச்சேதமும், கால்நடைகள் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com