உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி இழப்பீடு

உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி நிவாரணம், கல்வி மற்றும் வேலையில் 5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வகை செய்யும் தனிநபர் மசோதா மக்களவையில் அறிமுகம்
உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி இழப்பீடு

உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி நிவாரணம், கல்வி மற்றும் வேலையில் 5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வகை செய்யும் தனிநபர் மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சுப்ரியா சுலே இந்த மசோதாவை அறிமுகம் செய்து வைத்து பேசியபோது, "உயிர்த் தியாகம் செய்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்துக்கான நிதியுதவி வழங்கல் சட்டம் 2019' என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்' என்றார். 

அந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் வருமாறு:  பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமையின் கீழ் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டு, உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கான நிதியுதவி மற்றும் நலத் திட்டங்கள் வழங்கப்படுவது மேற்பார்வையிடப்பட வேண்டும். 

பாதுகாப்புப் படையினர் தங்களது தாய் நாட்டுக்காக உயிரிழப்பது, உச்சபட்ச தியாகமாகும். அதை ஈடு செய்யும் வகையில், அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசின் குறைந்தபட்ச பொறுப்பாகும். ராணுவம், விமானப் படை, கடற்படை, கடலோர காவல் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் பணியின்போது போர்க் களத்திலோ, இயற்கையான முறையிலோ மரணமடைந்தால் அவர்கள் "தியாகிகள்' என்று கருதப்பட வேண்டும். 

அவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். ஒரு பாதுகாப்புப் படை வீரர் வீரர் உயிரோடு இருந்தால் அவருக்குக் கிடைக்கும் ஓய்வூதியம் மற்றும் இதர பலன்கள், அவர் உயிரிழக்கும் பட்சத்தில் அப்படியே அவரது குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டும். உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு முழுமையான மருத்துவக் காப்பீடும், அவர்களது மனைவி பெயரில் ஆயுள் காப்பீடும் வழங்கப்பட வேண்டும். அவர்களது குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அதே அளவு இடஒதுக்கீடு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளிலும் அவர்களின் தகுதியான வாரிசுகளுக்கு வழங்கப்பட வேண்டும். 
இது தவிர, உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்துக்கு வாழ்நாள் இலவச ரயில் பயண அனுமதி, ஆண்டு விடுமுறைக்காக இந்தியாவுக்குள் சுற்றுலா செல்லும் சலுகை, அப்போது அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்கும் அனுமதி, அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்கள், குடியரசு தின அணிவகுப்பு ஆகியவற்றை பார்வையிட இலவச அனுமதி போன்றவை வழங்கப்பட வேண்டும் என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com