மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்களை இழுக்கும் பாஜக

கடந்த இரு தேர்தல்களில் மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவுக்கு மாநிலங்களவையில் இப்போது வரை பெரும்பான்மை இல்லை.
மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்களை இழுக்கும் பாஜக

கடந்த இரு தேர்தல்களில் மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவுக்கு மாநிலங்களவையில் இப்போது வரை பெரும்பான்மை இல்லை. இதனால், எதிர்க்கட்சி எம்.பி.க்களை வளைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. மக்களவையில் எளிதாக நிறைவேற்றப்படும் பல மசோதாக்கள், பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. இதனால், மாநிலங்களவையில் தனது பலத்தை அதிகரிக்கும் நோக்கில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அண்மையில் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களில் 4 பேர் பாஜகவில் இணைந்தனர். 6-இல் நால்வர் கட்சி மாறியதால், அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியவல்லை.

இதுதவிர சமாஜவாதி கட்சி மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனுமான நீரஜ் சேகர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். இந்த இடத்துக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெரும் அளவுக்கு உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் பாஜகவுக்கு பலம் உள்ளது.

245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 78 எம்.பி.க்கள் உள்ளனர். இதற்கு அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு 48 எம்.பி.க்கள் உள்ளனர். திரிணமூல் காங்கிரஸூக்கு 13 எம்.பி.க்கள் உள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 116 எம்.பி.க்கள் உள்ளனர். எனினும், கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு தர மறுத்து வருவது பாஜகவுக்கு பிரச்னையாக உள்ளது. அதே நேரத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சில விஷயங்களில் மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு தர வேண்டும் என்று ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியிடம் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளார். அக்கட்சிக்கு மாநிலங்களவையில் மூன்று எம்.பி.க்கள் உள்ளனர்.

எனினும், மக்களவையில் உள்ளதுபோல் மாநிலங்களவையிலும் தங்களுக்கு பெரும்பான்மை இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் இலக்காக உள்ளது. இப்போது பெரும்பாலான மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி உள்ளது. பாஜக ஆட்சியை இழந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் கூட அவர்களுக்கு கணிசமான எம்எல்ஏக்கள் உள்ளனர். சுழற்சி முறையில் மாநிலங்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் எப்படியும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும்.

இதற்கு முன்னதாகவே உத்தரப் பிரதேசத்தில் இருந்து மேலும் சில சமாஜவாதி தலைவர்கள், பாஜகவுக்கு வர இருப்பதாக அண்மையில் பாஜகவில் இணைந்த நீரஜ் சேகர் கூறியுள்ளார். கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மீது மேலும் சில மாநிலங்களவை எம்.பி.க்கள் அதிருப்தியில் உள்ளதால், அவர்கள் ராஜிநாமா செய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. சமாஜவாதி கட்சிக்கு இப்போது 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் எத்தனை பேர் ராஜிநாமா செய்தாலும் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும். ஏனெனில், 404 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் பாஜகவுக்கு 300-க்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர். அங்கு மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெற்றால் பாஜக எளிதாக வென்றுவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com