இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புக்கு (இஸ்ரோ) அமெரிக்க விண்வெளி ஆய்வு
இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து


சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புக்கு (இஸ்ரோ) அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வாழ்த்துத் தெரிவித்துள்ளது. நிலவின் தென்பகுதியில் இஸ்ரோ நடத்தும் ஆய்வுகளை ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக நாசா சார்பில் வெளியிடப்பட்ட சுட்டுரைப் பதிவில், சந்திரயானை ஏவியுள்ள இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இத்திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் பெருமை கொள்கிறோம். நிலவின் தென் பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம். ஏனெனில், அடுத்த சில ஆண்டுகளில் நிலவின் தென் பகுதிக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாங்கள் தயாராகி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் புகழாரம்: சந்திரயான்-2 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது தொடர்பாக பல்வேறு சர்வதேச ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தியில், இந்திய விண்வெளி ஆய்வுத் துறை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அடுத்ததாக விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தையும் இந்தியா மேற்கொள்ள இருக்கிறது. முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில், மற்றவர்களைவிட குறைந்த செலவில் இந்தியாவின் நிலவுப் பயணம் அமைந்துள்ளது ஆர்வத்தை தூண்டும் பெருமைக்குரிய விஷயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் விண்வெளி ஆய்வுத் துறை சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக சந்திரயான்-2 தொடர்பான செய்திகள் இந்தியா முழுவதும் பரவி இருந்தது. பள்ளிச் சிறுவர்கள்கூட ராக்கெட் மாதிரிகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டினர். நிச்சயமாகவே இது இந்தியர்களுக்கு பெருமைக்குரிய தருணம்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஎன்என் தொலைக்காட்சி செய்தியில், கடந்த 2014-இல் செவ்வாயில் தடம் பதித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இப்போது ஹாலிவுட்டில் ஒரு விண்வெளிப் படம் எடுக்கும் செலவைவிட குறைவான செலவில் (ரூ.978 கோடி) நிலவுக்கு விண்கலத்தை இந்தியா அனுப்பியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் கார்டியன் நாளிதழில், நிலவின் தென் பகுதியில் முதல்முறையாக இந்தியா ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. இதன் மூலம் நிலவு குறித்த முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்தி வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com