தூய்மை இந்தியா குறித்த சர்ச்சை கருத்து: பிரக்யா சிங் தாக்குருக்கு ஜெ.பி. நட்டா கண்டனம்

கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்ததற்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூய்மை இந்தியா குறித்த சர்ச்சை கருத்து: பிரக்யா சிங் தாக்குருக்கு ஜெ.பி. நட்டா கண்டனம்


கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்ததற்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரக்யா சிங். அந்த மாநிலத்தின் சாஹோர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக தொண்டர்கள் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரக்யா, எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் இணைந்து தொகுதி வளர்ச்சிக்காக பணியாற்றுவதுதான் ஒரு எம்.பி.யின் வேலை. நாம் அனைவரும் கழிப்பறைகள் சுத்தம் செய்வதற்காக இங்கு இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 
நாம் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டோமோ, அந்த பணியை நேர்மையாக செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
அனைவரும் திறந்தவெளி கழிப்பிடங்களை விடுத்து கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டும் மற்றும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 
இந்தத் திட்டம் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அதை அவமதிக்கும் வகையில் பிரக்யா கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், பிரக்யா கூறிய கருத்துக்காக, பாஜக அவருக்கு சம்மன் அனுப்பியது. இதுதொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில்,  தில்லியில் பாஜக தலைமையகத்தில் கட்சியின் செயல் தலைவர் ஜெ.பி. நட்டாவை , பிரக்யா திங்கள்கிழமை சந்தித்தார். அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ஜெ.பி.நட்டா, கட்சி தலைமை அதிருப்தி அடைந்திருப்பது குறித்து பிரக்யாவுக்கு தெரிவித்தார். கட்சியின் கொள்கைகளுக்கு எதிர்மறையான கருத்துகளை கூறுவதை தவிர்க்குமாறு பிரக்யாவுக்கு அறிவுறுத்தினார் என்றன.
மகாராஷ்டிர மாநிலம், மாலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் பிரக்யா. அந்த வழக்கில் தற்போது அவர் ஜாமீனில் வெளியில் உள்ளார். மக்களவைத் தேர்தலின்போது, பல சர்ச்சைக் கருத்துகளை பிரக்யா தெரிவித்திருந்தார். 
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறி மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கினார். அந்தக் கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com