மோடி 2.0 அரசு 50 நாள்கள் நிறைவு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற மத்திய அரசு 50 நாள்களை நிறைவுசெய்துள்ளது.
மோடி 2.0 அரசு 50 நாள்கள் நிறைவு!


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற மத்திய அரசு 50 நாள்களை நிறைவுசெய்துள்ளது.
மக்களவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பெருமிதம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 542 தொகுதிகளில், 378 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 58 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அமைச்சர்கள் மற்றும் இணையமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்கா விவரங்கள் கடந்த மே 31-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 50 நாள்கள் நிறைவடைந்ததையொட்டி, அதற்கான செயலறிக்கையை தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் 50 நாள்களில் விவசாயிகள், வணிகர்கள், சிறிய அளவிலான தொழிலதிபர்கள், வேலையில்லா இளைஞர்கள், நடுத்தரக் குடும்பத்தினர் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பயன் தரும் வகையிலான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
வெறும் கனவல்ல..: தகுந்த முறையில் வேகமாகவும், திறனுடனும் செயல்பட்டு, தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான முதலாவது ஆட்சிக் காலத்தை விட இரண்டாவது ஆட்சிக் காலம் மிகுந்த பயனுள்ள வகையில் இருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக இடப்பட்ட அஸ்திவாரத்தின் மேல் மாளிகையை எழுப்ப நாங்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம். 
நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு, சமூக நீதி, கல்வி உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திட்டங்களை வகுத்து, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. வரும் 2024-25 நிதியாண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடிக்கு (5 டிரில்லியன் டாலர்) உயர்த்த வேண்டும் என்பது வெறும் கனவல்ல; அதை அடைவதற்கான செயல்திட்டங்கள் சிறப்பாக வகுக்கப்பட்டுள்ளன. அந்த இலக்கை குறிப்பிட்ட காலத்தில் மத்திய அரசு அடையும்.
அதிக அளவில் முதலீடு: சாலை, ரயில்வே, துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து, ஜல் சக்தி துறை, 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் நீர் உள்ளிட்டவற்றில் மத்திய அரசு ரூ.100 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்டோருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் தேசிய ஆராய்ச்சி அமைப்பு தொடங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள், ராணுவ வீரர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், நடுத்தரப் பிரிவினர், வணிகர்கள் உள்ளிட்டோர் நாட்டை முன்னேற்றி வருகின்றனர்; அண்டை நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவையும் மேம்படுத்தி வருகின்றனர். முதலீடு, வளங்களைப் பெருக்குதல், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், சமூக நீதி உள்ளிட்டவை மத்திய அரசின் முதல் 50 நாள்களில் முக்கியத்துவம் பெற்றன. வரும் நாள்களில் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் முதலீடுகள் பெருகும் என நம்புகிறோம்.
முக்கிய சாதனைகள்: அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கியது, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 2 முதல் 3 மடங்கு அதிகரித்தது, 10,000 விவசாயிகள் சங்கங்களை அமைத்தது உள்ளிட்டவை முதல் 50 நாள்களில் மத்திய அரசின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும். தொழிலாளர் சட்டங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள், சுமார் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களுக்குப் பெரும் பயனளிப்பதாக இருக்கும்.
முதலீட்டை ஈர்க்கும் வகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி மூலதனம் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோருக்காக தனி தொலைக்காட்சி சானல் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு வெற்றிகரமான நடவடிக்கைகள் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளைக் குறைத்துள்ளன. வங்கிக் கடன்மோசடியில் ஈடுபட்டு, வெளிநாடு தப்பியவர்களை நாடுகடத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீட்டு நிறுவன மோசடிகளைத் தடுப்பதற்கான மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
உலக அரங்கில்..: சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. வரும் 2022-ஆம் ஆண்டு மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள இருக்கும் ககன்யான் திட்டமும் வெற்றிகரமாக அமையும் என நம்புகிறோம். பிரதமர் மோடியால் உலக அரங்கில் இந்தியாவின் மீதான பார்வை மேம்பட்டுள்ளது என்றார் ஜாவடேகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com