வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

சந்திரயான்-2 விண்கலத்துடன் ஏவப்பட்ட இந்தியாவின் மிகுந்த சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் வெற்றிகரமாக திங்கள்கிழமை விண்ணில் பாய்ந்தது. 
சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்தபடி விண்ணில் திங்கள்கிழமை சீறிப் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்.
சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்தபடி விண்ணில் திங்கள்கிழமை சீறிப் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்.


சந்திரயான்-2 விண்கலத்துடன் ஏவப்பட்ட இந்தியாவின் மிகுந்த சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் வெற்றிகரமாக திங்கள்கிழமை விண்ணில் பாய்ந்தது. 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, திட்டமிட்டபடி திங்கள்கிழமை பிற்பகல் 2.43 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
4,000 கிலோ எடையைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட மிகுந்த சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மிகுந்த சப்தத்துடன் நெருப்பையும், புகையையும் கக்கியபடி ராக்கெட் ஏவுதளத்திலிருந்து மேலெழும்பியது. ஏவப்பட்ட 5 நிமிடங்கள் 18 விநாடிகளில் அதன் கிரையோஜெனிக் என்ஜின் பற்றவைக்கப்பட்டு, அடுத்த நிலைக்கு ராக்கெட் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ராக்கெட் ஏவப்பட்ட 16 நிமிடங்கள் 23 விநாடிகளில் ராக்கெட்டிலிருந்து சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக பிரித்துவிடப்பட்டது.
இந்தத் திட்டத்தை ஏற்கெனவே, ஜூலை 15-ஆம் தேதி நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ராக்கெட் ஏவுவதற்கு 56 நிமிடங்கள் இருக்கும்போது, எரிபொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டு, ராக்கெட் ஏவுவது நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், ஓரிரு நாள்களில் கசிவை சரிசெய்த விஞ்ஞானிகள் பிற ஆய்வுகளையும் நிறைவு செய்து, இப்போது வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளனர்.
இதன் காரணமாக, ராக்கெட் ஒவ்வொரு நிலையையும் வெற்றிகரமாகத் தாண்டும்போதும், இஸ்ரோ விஞ்ஞானிகள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இறுதியாக விண்கலம் ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டதும், இஸ்ரோ தலைவர் சிவன், சக விஞ்ஞானிகளிடம் கை குலுக்கி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
பின்னர், இஸ்ரோ தலைவர் சிவன் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியது:
திட்டமிட்ட புவி சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்-2 நிலைநிறுத்தப்பட்டிருப்பது, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தில் இந்தியா அடுத்த கட்டத்தை  எட்டியிருக்கிறது.
கடந்த 15-ஆம் தேதி ராக்கெட்டை ஏவ முயற்சித்தபோது, கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. 
அந்த தொழில்நுட்பக் கோளாறை விஞ்ஞானிகள் ஒன்றரை நாள்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு சரிசெய்தனர். அதன் பின்னர், 24 மணி நேரம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ராக்கெட் ஏவுவதற்கு முழு தகுதியுடன் இருப்பது உறுதி செய்யப்பட்ட உடன், ராக்கெட்டை மீண்டும் ஏவுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இப்போது அந்தத் திட்டம் வெற்றியடைந்திருக்கிறது.
இப்போது அனுப்பப்பட்டிருக்கும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட்டின் செயல்பாட்டுத் திறன், முந்தைய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஒரே திட்டத்தில் மூன்று கருவிகள், அதாவது ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்று கருவிகள் உருவாக்கப்பட்டு அனுப்பப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. இந்தச் சாதனைகளைப் படைத்த சக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் என்றார்.
உலக நாடுகளில் முதல் முறை... இதுவரை எந்தவொரு உலக நாடும் அனுப்பாத நிலவின் தென்துருவப் பகுதிக்கு இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் ஆய்வுக்காக அனுப்பப்படுகிறது. அதுமட்டுமன்றி அமெரிக்கா, ரஷியா, சீனா நாடுகளுக்கு அடுத்தப்படியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கும் முதல் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது.

விண்கலத்தில் 14 உபகரணங்கள்    
நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்தியா சார்பில் முதல்முதலில் கடந்த 2008 அக்டோபரில் சந்திரயான்-1 விண்கலம் அனுப்பப்பட்டது. பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்துடன் 5 இந்திய உபகரணங்கள், ஐரோப்பாவின் 3 உபகரணங்கள், அமெரிக்காவின் 2 உபகரணங்கள், பல்கேரியாவின் 1 உபகரணம் என மொத்தம் 11 உபகரணங்கள் அனுப்பப்பட்டன. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை சந்திரயான்-1 உறுதி செய்தது.
இதன் அடுத்த கட்ட ஆய்வுக்காக, இப்போது சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த விண்கலத்துடன் 13 இந்திய உபகரணங்கள் மற்றும் ரெட்ரோ ரிப்ளக்டர் என்ற அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் உபகரணம் ஒன்று என மொத்தம் 14 கருவிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.
இதுவரை நிலவின் பரப்பளவில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கும் முயற்சி 38 முறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த முயற்சியில் பாதி மட்டுமே வெற்றியில் முடிந்திருக்கிறது. இப்போது 39-ஆவது முயற்சியை இந்தியா  மேற்கொண்டிருக்கிறது.
இதுபோன்ற பல்வேறு சாதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் படைக்க உள்ளதால், சந்திரயான்-2 திட்டம் இந்திய மக்களிடையே மட்டுமன்றி, உலக நாடுகளிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 அறிவியல் துறையில் புதிய உச்சங்களை இந்தியா எட்டும் வகையில் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய அனைத்துத் தரப்பினருக்கும் எனது வாழ்த்துகள்.
 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 

இஸ்ரோ விஞ்ஞானிகள், பணியாளர்கள் என அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விண்கலம், ராக்கெட் என அனைத்தும் முழுவதும் உள்நாட்டுத் தயாரிப்பு என்பது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம்.
 குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க தருணம் இது. சந்திரயான் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதன் மூலம் நமது விஞ்ஞானிகளின் திறமை வெளிப்பட்டுள்ளது. இது முழுவதும் நமது உள்நாட்டுத் தயாரிப்பு என்பது கூடுதல் பெருமை.
பிரதமர் மோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com