
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்டிஐ) மத்திய அரசு மேற்கொள்ளும் திருத்தங்களினால், அந்தச் சட்டம் அழிவின் விளிம்பில் உள்ளது; மத்திய தகவல் ஆணையத்தின் (சிஐசி) சுதந்திரத்தை அழிக்க மத்திய அரசு நினைக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதா, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. இந்த சட்டத்திருத்த மசோதா, தகவல் ஆணையர்களின் நியமனம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள், அவர்களின் பதவிக்காலம், அவர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயிப்பதற்கு அதிகாரமளிக்க வகை செய்கிறது. அதைக்குறிப்பிட்டு சோனியா காந்தி மேற்கண்டவாறு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஆர்டிஐ சட்டம், பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனை கோரப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்தச் சட்டம் அழிவின் விளிம்பில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், ஆர்டிஐ சட்டம் மூலமாக தகவல் கேட்டுப் பெற்றுள்ளனர். அரசின் அனைத்து மட்டத்திலும் வெளிப்படைத்தன்மை இருப்பதை அந்தச் சட்டம் உறுதி செய்தது. அந்தச் சட்டத்தின் மூலம் நமது நாட்டின் ஜனநாயகத் தன்மை மேலும் வலுவானது.
ஆர்டிஐ சட்டம், மத்திய அரசுக்கு தொந்தரவளிக்கும் வகையில் இருப்பதால், இந்த சட்டத்தை அழிக்க மத்திய அரசு நினைக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. மத்திய தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தை பறிக்க மத்திய அரசு நினைக்கிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தை (சிவிசி) போல மத்திய தகவல் ஆணையத்தையும் மத்திய அரசு செயலிழக்க செய்கிறது.
நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதைப் பயன்படுத்தி தான் நினைத்ததை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் இது நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.