
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ண காட்டி, மன்கோட், மெந்தர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். மோட்டார் குண்டுகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள் தரப்பில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் இல்லை என்றார் அந்த அதிகாரி.
முன்னதாக, ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த திங்கள்கிழமை அத்துமீறி நடத்தினர்.
இதில், முகமது ஆரிஃப் ஷபி ஆலம் கான் என்ற ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவது, கடந்த 4 நாள்களில் இது மூன்றாவது முறையாகும்.
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சனிக்கிழமை பயணம் மேற்கொண்டார். அன்றைய தினம் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் கிராமவாசி ஒருவர் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.