
காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளதை, இந்தியாவும், பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்தார்.
பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் உடனான சந்திப்பின்போது, காஷ்மீர் விவகாரத்தில் தன்னை மத்தியஸ்தம் செய்ய முடியுமா என்று பிரதமர் மோடி கேட்டதாக அவரிடம் டிரம்ப் கூறினார்.
எனினும், மோடி அவ்வாறு எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் முன்வைக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், மெஹபூபா முஃப்தி, சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடுவதை விரும்பவில்லை என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. இருப்பினும், டிரம்பின் அறிவிப்பு மிகப் பெரிய கொள்கை மாற்றமாகும். இரு நாடுகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹூரியத் மாநாடு வரவேற்பு
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்வதை வரவேற்பதாக ஹூரியத் மாநாடு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காஷ்மீர் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போதும் அமைதிப் பேச்சுவார்த்தையை வரவேற்க தயாராக இருக்கின்றனர். இதற்கான முயற்சியை வரவேற்கிறோம்.
கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் பிரச்னை நீடித்து வருகிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுடன் நடந்த சந்திப்பின்போது, காஷ்மீர் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக இம்ரான் கான், டிரம்பிடம் தெரிவித்தார். இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தில் தன்னை மத்தியஸ்தம் செய்ய முடியுமா என்று பிரதமர் மோடி கேட்டதாக அவரிடம் டிரம்ப் கூறினார்.
எனினும், மோடி அவ்வாறு எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் முன்வைக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்தது.