
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, வாஷிங்டனில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
2 வாரங்களுக்கு முன்பு ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டின்போது, நானும் பிரதமர் மோடியும் சந்தித்துக் கொண்டோம். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய விரும்புகிறீர்களா? என்று பிரதமர் மோடி என்னிடம் கேட்டிருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன. இந்த விவகாரத்துக்கு மத்தியஸ்தம் செய்ய நான் தயாராக உள்ளேன் என்றார் அதிபர் டிரம்ப்.
அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம், நாடாளுமன்றத்திலும் செவ்வாய்க்கிழமை எதிரொலித்தது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் எழுப்பினர்.
காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா கூறுகையில், காஷ்மீர் விவகாரத்திலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்திலும் மூன்றாம் நபரின் மத்தியஸ்த நடவடிக்கையை அனுமதிக்கப்போவதில்லை என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. அப்படியிருக்கையில் அதிபர் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். பிரதமர் மோடி மாநிலங்களவையில் நேரில் ஆஜராகி, இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக்கொண்டுவிட்டதா என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
டிரம்ப்பிடம் கோரவில்லை: இதையடுத்து, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது:
பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பிடம் அதுபோன்ற கோரிக்கைகள் எதையும் முன்வைக்கவில்லை என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்கிறேன். காஷ்மீர் விவகாரம், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பிரச்னை. பாகிஸ்தானுடனான அனைத்துப் பிரச்னைகளும் இருதரப்பு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே தீர்க்கப்படும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. சிம்லா ஒப்பந்தமும், லாகூர் அறிக்கையும் இந்தப் பிரச்னை இருதரப்பு நடவடிக்கைகள் மூலமே தீர்க்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
எல்லைப் பகுதிகளில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதச் சம்பவங்கள் நிறுத்தப்பட்டால் மட்டுமே, காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டால், அதற்குத் தயார் என்றே அதிபர் டிரம்ப் கூறினார். பிரதமர் மோடி இது தொடர்பாக அவரிடம் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை. எனவே, நாட்டு மக்களை காங்கிரஸ் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றார் ஜெய்சங்கர்.
தவறான முன்னுதாரணம்: இருந்தபோதிலும், வெளியுறவு அமைச்சரின் பதிலில் திருப்தியடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷங்கள் எழுப்பத் தொடங்கினர். அவையை நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்காததால், அவையை அடுத்தடுத்து வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார். பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அமெரிக்கா விளக்கம்: முன்னதாக, இந்தப் பிரச்னை தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இருதரப்பு பிரச்னையாகும். இதில் தீர்வு காண இருநாடுகளும் ஆர்வமுடன் இருப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்தார். இந்த விவகாரத்தில் உதவி செய்யத் தயாராக இருப்பதாகவே அவர் தெரிவித்தார்.
இருநாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு உண்டான சூழலை உருவாக்க, அமெரிக்கா தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.