
தமிழகத்தை சேர்ந்த தம்பதியைகேரளத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து, 3 நாள்களுக்குப் பிறகு வயநாடு மாவட்டம் அம்பலவயல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழ் பேசும் தம்பதியை உள்ளூர் காங்கிரஸ் தொண்டரான சஜீவானந்த் என்பவர் சரமாரியாகத் தாக்கினார். தனது கணவரைத் தாக்குதவதை நிறுத்துமாறு அந்தப் பெண் கெஞ்சிய போதிலும் விடவில்லை. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கூடியிருந்த மக்களும் தடுக்க முன்வரவில்லை. மேலும், அந்தப் பெண்ணை இழிவாகப் பேசியது விடியோ மூலம் தெரிய வந்தது.
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய இந்த விடியோ காட்சி கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. தம்பதி யார் என்பதும் விசாரணையில் உள்ளது. தம்பதியைத் தாக்கிய நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
இதனிடையே, சஜீவானந்த் மீது மாநில மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆணையத்தின் தலைவர் எம்.சி. ஜோசபின் செவ்வாய்க்கிழமை அம்பலவயல் காவல் நிலையத்திற்கு சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், இந்த சம்பவம் அம்பலவயல் காவல் நிலையத்திற்கு அருகிலேயே நிகழ்ந்திருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.